உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
254 ||

அப்பாத்துரையம் - 6




ஒரு தடவை படைத் தலைவன் முகமதலி படைத்துறைச் செலவுக்குப் பணம் கோரினான். நிதிக் கணக்கரும் அருகிலேயே இருந்தனர். ஆனால், நாணயச் செலாவணி பற்றி ஹைதர் ஏதோ சச்சரவில் ஈடுபட்டிருந்தான். அவன் எரிச்சல் படைத் தலைவன் பக்கமாகத் திரும்பிற்று. "படைச் செலவு, படைச் செலவு என்று மாதம் மூன்று தடவை பணம் வாங்குகிறீர். இவற்றை எல்லாம் என்னிடமிருந்து பறித்து என்னை ஓட்டாண்டியாக்கி, கோடீஸ்வரனாகப் பார்க்கிறீர். எல்லாம் பார்க்கிறேன். உம்மைத் திருடனென்று சரியானபடி தண்டித்து, நீர் சேர்த்து வைக்கும் தங்கக்காசுகள் அத்தனையையும் பறிமுதல் செய்கிறேனா இல்லையா, பாரும்! போம், போம். இப்போது இங்கே நிற்க வேண்டாம்” என்றான்.

முகமதலி மன்னனிடமிருந்து முகந்திருப்பி நிதிக் கணக்கரை நோக்கினான். "நம் தலைவர் தாம் எல்லாம் அறிந்தவர் என்று நடித்து நம்மை ஏமாற்றப் பார்க்கிறார். அவர் மண்டையில் மூளையில்லை என்பது நமக்குத் தெரியாதா என்ன? அவர் கிடக்கிறார். அரசாட்சியின் பொறுப்பு அவருக்கு என்ன தெரியும்? நீங்கள் பணத்தைக் கொடுங்கள்” என்று அமைதியாகக் கேட்டான்.

நிதிக்கணக்கர் விழித்தனர்.

"இந்தச் சனியன் பொல்லாத சனியன். கேட்ட பணத்துக்குமேல் ஒன்றிரண்டு நூறு கொடுத்து ஒழித்துக் கட்டுங்கள்” என்று கூறி, ஹைதர் நிதிக் கணக்கர்களுக்கு ஆணை பிறப்பித்தான்.

இஸ்லாமிய மன்னர் பெருமன்னரிடையே மிகச் சிறந்தவர்கள்கூடச் சமயத்துறையில் மட்டும் வெறியுடையவர்களாக இருந்ததுண்டு. அக்பர், ஷாஜகான் போன்ற வடபுல மன்னர்கள் இதற்கு விலக்கானவர்கள் என்று புகழப்படுவதுண்டு. இது பெரிதும் உண்மையே. ஆனால், அக்பரும் ஷாஜகானும் தங்கள் ஆட்சிநலனைக் கருதி அரசியல் தந்திர முறையிலேயே சமரசப் பண்பாளராயிருந்தனர். இன்னும் சிலர் எம்மதமும் சம்மதமே என்ற ஆழ்ந்த சமயப்பற்றற்ற பொதுநிலையிலேயே சமரசம் பேணியுள்ளனர். ஆனால், ஹைதரின் சமரசம் ஆழ்ந்த சமய உணர்வின் பயனாக எழுந்ததேயாகும். அக்பர் சமரசத்தையும்,