உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5. வடக்கும் தெற்கும்


பிரிட்டிஷ் ஆட்சிக் காலம்வரை எவருக்கும் தலை வணங்காமல் உலகில் தனியாட்சி செலுத்திய மாநிலம் திராவிடநாடு. தென்திசையரசர் வடதிசையில் படையெடுத்து அதை அடிப்படுத்தியதுண்டு. நிலந்தரு திருவிற் பாண்டியன், ஆரியப்படை கடந்த பாண்டியன் நெடுஞ்செழியன், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், சேரன் செங்குட்டுவன், கரிகாற் சோழன், ஆந்திரப் பெரும் பேரரசர், கலிங்கப் பெரும் பேரரசர், சோழப் பெரும்பேரரசன் இராசேந்திரன் ஆகியோர் வரலாறுகள் இதற்குச் சான்று. ஆனால் வடதிசை யரசர், பேரரசர் எவரும் திராவிடத்தின் வட எல்லையில்கூட நெடுங்காலம் விளையாடியதில்லை. அசோகன் கலிங்கம் கடந்ததில்லை, சோழப் பேரரசர் கலிங்கம் கடந்து கங்கையும் கடாரமும் அடிப்படுத்தியதுண்டு. கனிஷ்கன் கங்கை கடந்ததில்லை, செரன் செங்குட்டுவன் கங்கை கடந்து கனகவிசயரை - பேரரசன் கனிஷ்கனையும் அவன் கூட்டாளியையுமே- கல்சுமக்க வைத்தான். ஹர்ஷன் விந்தம் கடந்ததில்லை, ஆனால் விந்தம் கடக்குமுன் தென்னகம் ஆண்ட புலிகேசி ஹர்ஷனையும், தமிழகமாண்ட பல்லவன் நரசிம்மவர்மன் அந்தப் புலிகேசியையும் வென்று மண் கொண்டனர் !

அலாவுதீன் கில்ஜி, முகமது பின் துக்ளக் விந்தம் கடந்த அன்றே தம் பேரரச வாழ்வு இழந்தனர். அவர்கள் வடதிசையை எவ்வளவு எளிதில் கீழடக்க முடிந்ததோ, அவ்வளவு எளிதில் விந்த எல்லையையே கடக்க முடியவில்லை. அவுரங்கசீப் காலம்வரை நாலு முகலாயப்பேரரசர் முயற்சிகளின் முடிவு-முகலாயப் பேரரசின் வீழ்ச்சியாகவே முடிந்தது!

தென்திசை வடதிசையை வெல்ல முடிந்தது. வடதிசை தென்திசையை என்றும் அணுக முடிந்ததில்லை. அதுமட்டுமன்று. வட திசையின் வரலாறு ஓயாத அயலினம், அயலரசர் படையெடுப்