உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




184

அப்பாத்துரையம் - 11

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திலிருந்து இந்தியா, பாகிஸ்தான், பர்மா, இலங்கை, சிங்கப்பூர், மலாயா ஆகிய நாடுகள் எப்படிப் பிரிந்து சுதந்தரம் கோரினவோ, அப்படித்தான் திராவிட இயக்கத் தவரும் திராவிடரும் திராவிடத்தின் சார்பில் இந்திய ஏகாதிபத்தி யத்தினிடமிருந்து பிரிந்து திராவிட நாட்டுச் சுதந்தரம் அல்லது விடுதலை கோருகின்றனர்; கோரிப் போராடத் தொடங்கி விட்டனர். ஆனால், சுதந்தரம் என்ற சொல் சுதந்தர இயக்கத்த வரால் கூட இங்கே வழங்கப்படாமல், ஏகாதிபத்தியச் சூழல் காரணமாகவே பிரிவினை என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. செயற்கைச் சூழல்களால் ஓர் அயலினத்துடன், அயல் தேசியத்துடன் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலிருந்தே மற்றொரு தாலை அயலினத்தால் திராவிடம் வலுக்கட்டாயமாக, அத்தொலை அயலினத்தின் வசதிக்காகவே, இணைக்கப் பட்டிருந்தது. இப்படித் திராவிடம் தொலை அயலினத்தவரால், அத்தொலை அயலினத்துக்கு உள்ளான, அவர்கள் ஏகாதிபத்திய மரபை ஏற்ற ஓர் அணிமைக் கங்காணி அயலினத்துடன் கட்டிப் போடப் பட்டிராவிட்டால், பிரிவினை என்ற இத்தகைய சொல்லே எழுந்திருக்காது. விடுதலை, சுதந்தரம் என்ற சொல்லே வழங்கப்பட்டிருக்கும்.

அதுமட்டுமன்று, நாம் சுதந்தரம் என்று சொல்லாமல் பிரிவினை என்று முழங்குவதற்கு இன்னும் ஒரு காரணமும் உண்டு. வடநாடு தென்னாட்டை என்றும் வென்றதில்லை, ஆண்ட தில்லை. ஆண்ட இனத்தினிடமிருந்த ஆளப்படும் இனம் சுதந்தரம் கோரி முழக்கமிடும். ஆனால், திராவிடம் கோரும் சுதந்தரம் ஆண்ட இனத்தினிடமிருந்தன்று, ஆளப்படும் ஓர் இனத்தினிடமிருந்தே - அதுவும் ஆளப்படும் தேசியத்தினிட மிருந்தன்று,ஆளப்படும் ஓர் ஏகாதிபத்தியத்தினிடமிருந்து தான்! அவ்வாறு பிரிந்துதான் அது முன்போல் தனித்தேசியமாக முடியும். பிரிவினை என்ற சொல்லையே திராவிட இயக்கத்தவர் வழங்குவதன் உண்மைக் காரணம் இதுவே. அவர்கள் ஆளும் இனத்தினிடமிருந்து சுதந்தரம் கோரவில்லை; தம்முடன் சேர்த்து ஆளப்பட்ட அடிமை இனத்தினிடமிருந்துதான் பிரிவினை கோருகின்றனர். அந்தப் பிரிவினைக்குப் பின்தான் அவர்களுக்குச் சுதந்தரம் கிட்டும்!