உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




18. பாரதக் கூட்டுறவில் திராவிட இனத்துக்கு இடம் உண்டா?

'ஆரியமாவது, திராவிடமாவது' அதெல்லாம் மலையேறி விட்ட காலம் இப்போது யார் திராவிடர், யார் ஆரியர்? எப்படி அறிவது? இரண்டின் கலவை மீதுதானே இன்றைய பாரத சமுதாயம் கட்டமைக்கப்பட்டுள்ளது?' என்று கூறும்

நல்லோர்கள், பெரியோர்கள், அருளாளர், சமரசவாதிகளை நாம் அங்கங்கே காண்கிறோம், வடக்கிலும் தெற்கிலும்!

இவர்கள் பெரும்பாலும் படித்தவர்கள்; ஆரிய திராவிட வேறுபாட்டை வரலாற்றில் கண்டுணர்ந்தவர்கள். பாரத பக்தி, காங்கிரஸ் பற்று, இத்தகையவர்களைத் தாம் காணும் வேற்றுமை கடந்து, ஓர் உருவெளித் தேசியத்தைக் கனவு காணத் தூண்டி யுள்ளன - அவ்வளவே. அக் கனவு நனவாக வேண்டுமானால், அவர்கள் காணும் ஒரே வழி வேற்றுமை அகற்றுவதல்ல, வேற்றுமை காணாதிருப்பதே. வேற்றுமை அகற்றவல்லவர், வேற்றுமை அகற்றவல்ல இயக்கம் காங்கிரஸ் தேசியமன்று. முற்போக்குடையவரென்று தப்பட்டையடித்துக் கொள்ளும் அதன் முன்னோடும் பிள்ளைகளான சமதருமவாதிகள், பொதுவுடைமையாளருமல்லர். அரசியல் சார்பற்ற ஆரியப் போர்வை போர்த்த சமயவாதிகளோ, சமஸ்கிருத வெறியர்களோ, இந்தி வெறியர்களோகூட அல்லர். ஏனெனில், இவர்களெல்லாம் நல்ல பாரத பக்தர்கள் காணும் வேற்றுமையை, கண்டு புறக்கணிக்க விரும்பும் வேற்றுமையைக் கூடக் காணாதவர்கள். ஆரிய திராவிட வேற்றுமையையே தங்கள் பாரத தேசியமாக, சமதர்மமாக, பொதுவுடைமைச் சமுதாயமாக, அகிம்சா தர்மமாகக் கருதுபவர்கள், ஆண்டான் அடிமை ஒற்றுமையன்றி எதுவும் குறிக்கொள்ளாதவர்கள் இவர்கள்.