உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிலம்பு வழங்கும் செல்வம்

89

இலங்கையில் 11ஆம் நூற்றாண்டுக்குரிய கண்ணகியின் மரச்சிலையும், வெண்கலச் சிலையும் பழம் பொருள் ஆராய்ச்சியாளரால் கண்டெடுக்கப் பட்டுள்ளன.

பத்தினிக் கடவுள் வணக்கம் தென்னாடு கடந்து கீழை உலகெங்கும் காணப்படுகிறது. எங்கும் பத்தினித் தெய்வம் கண்ணகியாகவே இருக்க வேண்டும் என்றில்லை. தமிழகத் திலேயே ஏழு நங்கையர் பத்தினிகளாக வழங்கப் பட்டதைச் சிலப்பதிகாரமே குறித்துள்ளது. ஆனால், கண்ணகி முன்னைய பத்தினித் தெய்வங்களுக்கில்லாத தனிச் சிறப்புகளுடன் உலகில் புதுத் தெய்வம் அல்லது வம்பப் பெருந் தெய்வமாக உலவினாள் என்பதற்கு ஐயமில்லை. புத்தர் அறநெறியை உலகில் பரப்பிய அசோகன் போலவும், கிறித்தவ நெறியைப் பரப்பிய பேரரசன் கான்ஸ்டன்டைன் போலவும், தமிழகப் பேரரசன் சேரன் செங்குட்டுவன் கண்ணகி வழிபாட்டை அவன் கால நாகரிக உலகெங்கும் பரப்பினான்.

தமிழகத்தில் பழைய வில்லுப்பாட்டைப் புதுப்பிக்க நாம் ஓர் கலைவாணர் என்.எஸ்.கே-யைப் பெற்றிருந்தோம்.கேரளத்தில் கதைகளியைப் புதுப்பிக்க ஒரு வள்ளத்தோள் நாராயண மேனனைப் பெற்றிருக்கிறோம்.பரதநாட்டியத்தை உலகில் பரப்ப உதயசங்கர் போன்று வட நாட்டவராவது முயன்று வந்துள்ளனர். இவற்றையெல்லாம் தாண்டிய உலகின் பழம் பெருங்கலையும் கலை சார்ந்த உலகப் பேரிலக்கியமுமான சிலப்பதிகாரம் சாக்கையர் கூத்தைப் புதுப்பித்தது. அதை மக்கள் மேடை ஏற்றத் தமிழகமோ, மலையாள நாடோ அல்லது தமிழ் மலையாள மொழிகளின் பழங்கலைச் சிறப்பிலும் வருங்கால வளத்திலும் அக்கறையுடைய வெளிநாட்டாரோ இனித்தான் முன்வருதல் வேண்டும்.

சிலப்பதிகாரம் ஒரு பல்வண்ணக் களஞ்சியம். காண்பவர் காட்சிக் கோணத்துக்கேற்ப அது பலவகையாகக் காட்சி யளிக்கிறது. அதை இலக்கியக் கண்ணோட்டத்துடன் பார்ப்பவர்க்கு அதனிலும் சிறந்த இலக்கியம் வேறு கிடையாது. மொழி நடையில் கருத்தூன்றுபவர்களுக்கு அது தமிழில் தமிழ் கலந்தாற் போன்ற விழுமிய இழுமெனும் இன்னோசை யுடையதாய் இலங்குகின்றது. வரலாற்றுக் கண்ணுடன்