உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
70 ||

அப்பாத்துரையம் - 14



மேற்கோளும் இந்த முழுமையான இனமலர்ச்சி வளர்ச்சிகளுக்குச் சான்று பகர்கின்றன.

கோ என்ற சொல் பாரசிக மொழியிலும் தமிழிலும் மட்டுமே மலை, அரசன் என்ற இருபொருள்களையும், தமிழில் மட்டுமே அந்த இரு பொருள்களுடன் குலமுதல்வி அல்லது குலமுதல்வன் (கோத்திரம்-கோவழிவந்த மரபு), கடவுள் (கோயில்- வழிபாட்டிடம்), அரசன் (கோயில்-அரண்மனை), சமயகுரு (கோமரத்தாடி) ஆகிய பொருள்களையும் சுட்டுவதாக அமைந்துள்ளது காணலாம். தாய்-தந்தை அல்லது அம்மையப்பனான இக்கோ அல்லது இறைவனே தமிழ்ப் புராண மரபில் மலையரசனாகிய பாண்டியன் (பொதியம் அல்லது மலையமலை ஆண்டவன்) வளர்த்த முத்தமிழ்ச் செல்வியாகிய உமையை மணந்து மலையரசனாகவே நாடாண்ட சிவபிரான் என மலர்ச்சியுற்றான். குமேர் அல்லது க்மேர், சைலேந்திரர் என்ற பண்டை மலேசிய, இந்தோனேசிய, சுமேரியப் பரப்புகள் கண்ட பேரரச மரபுகளின் பெயர்கள் மலையரசன் என்ற பொருளையே தருகின்றன. கோபுரம் என்ற தமிழ்ச் சொல்லுக்கும் இம்மரபு வழியிலேயே மலையின் சின்னமாக இலிங்கத்தின் மீதமைந்த மலையின் முழுமைச் சின்னம் என்ற பொருள் அமைந்தது. இக் கருத்து மரபின் தென்கிழக்காசியப் பரப்பு விரிவு இது என்பது மேலே சுட்டப்பட்டது.

பொது அல்லது பொதியில் அல்லது அம்பலம் என்ற சொல்லும் இதே மலர்ச்சி காட்டுகிறது. மலையாள மாநில வழக்கில் அது இன்றும் கோயிலையே உணர்த்துகிறது. ஆனால் தமிழிலோ அது பெரிதும் பொதுமை (Public, பொது நிலை, பொதுவிடம்), ஊர்வெளி, ஆட்சிமன்றம் ஆகிய பொருள்களே சுட்டுகிறது. அதே சமயம் இறைவன் ஆடுமிடம் என்ற கருத்துருவில் இச்சொல் அதன் தொல்பழஞ் சமயத் தொடர்பையும் (தமிழர் மரபில்) சமயமும் அரசியலும் ஒரே இணைமரபே என்ற மெய்ம்மையினையும் சுட்டிவிடுகிறது. சிதம்பரம் (சமக்கிருதம்: சித்-சிற்றுயிர் அதாவது ஆன்மா; அம்பரம்-வானவெளி) அல்லது சிற்றம்பலம் (சிறிய அம்பலம் அல்லது சிற்றுயிராகிய இடவெளி அல்லது கோயில்) என்ற நகர்ப் பெயரில் அம்பரம் அல்லது அம்பலம் என்ற சொல்லின் இந்த