உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
84 ||

அப்பாத்துரையம் - 14



அல்லது கிடைகள் அமைந்த பேரூரின் நடுவெளியிடம்; சமக்கிருத வடிவம்: விஷ்ணுக்ருகம்) எனவும் வழங்கின.

வேள்மரபு மலர்ச்சியில் குறிஞ்சி முல்லை மரபுகளில் கண்ட புரட்சிகரமான இம் மாறுபாடுகளைவிட மருதத்திணை மரபில் அது அடைந்த மலர்ச்சி மாறுபாடு குறைந்ததன்று, சிலபல வகைகளில் மேம்பட்டதேயாகும். ஏனெனில் மேலே குறித்தபடி, மருத நிலமரபே ஐந்திணை மரபாக மட்டுமன்றி, திணை வரம்புகளை அழித்து வளர்ந்த தற்கால மனித இன நாகரிகச் சமுதாய மரபாகவும் வளர்ந்துள்ளது. நாகரிக உலகில் இந்தியாவுக்கு மட்டும் தனித்தன்மை அளித்த தளமும் இதுவே யாகும். மனித இன நாகரிக வாழ்வில் கொங்குத் தமிழகம் வகித்துவந்துள்ள மைய இடம் விளங்குவதும் இத் தளமே!

ஐந்திணை மலர்ச்சியின் போக்கில் மருதநிலையின் மரபின்போது ஏற்பட்ட இந்தப் பெருந் திருப்பத்தை நாம் ஐந்திணைகளின் இறைமை மலர்ச்சியிலேயே காணலாம். இறைமரபு மலர்ச்சியின் தொடக்கத்தில் கோமுதல்வி பெண் நிலையில் கன்னித் தாயாகவும், பின்னர் குறிஞ்சி மரபிலேயே அத் தாயின் ஆண்கிளையாகிய மாயோனாகவும் மாறும் நிலை ஏற்பட்டது என்பது மேலே கூறப்பட்டது. குறிஞ்சி முல்லைத் திரிபாகிய பாலையிலோ அத் தாயின் வீரத் திருஉரு மீட்டும் அவ்விருவரின் பெண்வடிவான மாயோள் (நாரணி, திருமாலின் கிளைப்பாதி; சிவை, சிவபிரானின் மறுபாதி) அல்லது கொற்றவை ஆயிற்று. ஆனால். மருதநில மரபில் ஏற்பட்ட ஐந்திணை மலர்ச்சி அல்லது நாட்டு மலர்ச்சியின் முழுநிறைவும் அதன் புதுவளமுமே வேந்தன் (நாட்டுப் புதுவாழ்வு வேய்ந்தவன்) அல்லது மழைத் தெய்வமாகிய இந்திரன் என உருவகிக்கப் பட்டு, அந்த இரு பண்புகளின் ஓர் உருவான வேந்தன் அல்லது இந்திரன் மருதத்திணைக்கு உரிய இறைமை ஆனான். அம் மழையின் கருவள மாகவும், கடலுழவாகிய மீன் முத்து சங்கு பவளப்பயிர், கடல் வாணிகம் முதலான புதுவளங்களின் தாயகமாகவும் விளங்கிய கடலகத்தின் தெய்வமாகிய வருணனே நெய்தல் திணைக்குரிய இறைமை பெற்றான். இந்த ஐம்மை இறைமையே ஐங்குரவரையும் சுட்டி ஐயுரு இறைமை (பஞ்ச மூர்த்திகள்) மரபு ஆயிற்று.