உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
92 ||

அப்பாத்துரையம் - 14



மரபினராகவே ஆண்டனர், ஆண்டு மாண்டனர்.நாட்டைத் தம் வயப்படுத்துவதற்கு மாறாக அவர்கள் தாமே நாட்டின் வயப்பட்டு, நாட்டு வாழ்விலேயே தாமும் இரண்டறக் கலந்துவிட்டனர். நாட்டின் குடியரசுகளை அவர்கள் தமக்கு இரையாக்கிக் கொண்டாலும், குடியரசுப் பண்பாடுகளை அவர்கள் தமக்கு இரையாக்கிக் கொள்ளவில்லை. மாறாக, அவர்கள் தாமே அக் குடியரசுப் பண்புகளுக்கு இரையாகி அப் பண்புகளிலேயே தம்மை ழையவிட்டுச் சென்றனர்.

கொங்கு நாட்டு வேளிருட் பலரும் சங்க காலத்திலேயே முடியரசரால் முறியடிக்கப்பட்டுத் தம் ஆட்சியிழந்தவரேயாவர். ஆனால் ஆட்சியாளர்தான் ஆட்சியிழந்தனரேயன்றி, ஆட்சிக் குரிய மக்கள் சமுதாயம் தம் தனித்தன்மையையோ, தம் தொல் பழங்காலக் குடியரசு மரபையோ, வாழ்வையோ, பண்பையோ சமய ஒழுக்க மரபுகளையோ ஒருசிறிதும் இழந்துவிடவில்லை, மறந்துவிடவில்லை; கை நெகிழ விட்டு விடவும் இல்லை. கொங்கு நாட்டு மன்னரும் சரி, கொங்கு நாட்டின் மீது படையெடுத்துத் தாக்கிய பிறநாட்டு மன்னரும் சரி கொங்கு நாட்டின் இம் மக்கட் பண்பை மதித்துப் பேணிப் பாராட்டத் தவறவில்லை. ஏனெனில், பின் கூறப்பட்ட பிற நாட்டினரே வேளாளர் வேட்டுவர் போட்டியை ஊக்கியவராயிருந்த நிலையிலும்கூட, அவர்கள் இருசாராருக்கும் ஒருங்கே கொங்கர், காமிண்டர் ஆகிய பட்டங்கள் தந்து தம் சார்பில் அவர்களை ஆளவிட்டனர். தவிர, கொங்கு நாடாண்ட முடிமன்னர் மட்டுமன்றி, அவர்கட்கு முற்பட்ட வேள்புல ஆட்சியாளர்கள்கூட மக்களின் மரபு மூலமாகவும், மக்களின் இயல்பான தலைவர் மூலமாகவுமே பெரும்பாலும் ஆட்சி நடத்தினர். சங்ககாலத்துக்கு முன்பே ஊறிவிட்ட இந்தக் கொங்கு மக்கள் பண்பே, கொங்கு நாட்டின் காலங்கண்ட, ஆனால் காலங்கடந்து வளரும் தனித்தன்மை ஆகும். அதனைத் தொல்பழங்காலத்திலேயே கண்டதன் விளைவாகத்தான், மேலே கூறியபடி தமிழ்மரபு இந்நாட்டைக் கொங்கு நாடு என்று பண்புப்பெயர் சூட்டிப் பாராட்டிற்று என்னல் தகும். கொங்கு என்னும் சொல். தமிழ் எவ்வளவு பழமையான சொல்லோ, அதனினும் ஒரு சிறிதும் குறையாத பழமையுடைய பண்பார்ந்த சொல் என்பது இங்கே நினைவுகூரத் தக்கது ஆகும்.