உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
184 ||

அப்பாத்துரையம் - 14



சங்க காலத்துக்குப் பின் புன்னாட்டு வேள்புல ஆட்சி மரபில் பெண் எடுத்ததன் மூலமே, அப்போது முடியரசராகத் தொடங்கிவிட்ட கங்கர் புன்னாட்டையும் விழுங்கி, பின்னாளைய அரசு வல்லரசு மரபாக வளர்ச்சி பெற்றனர்.

எருமையூர் என்ற வேள்புலம், பண்டை வடகொங்கு நாட்டில், தற்காலத்தில் மைசூர் (எருமையூர் என்பதன் சமக்கிருத வடிவமான மகிஷபுரி என்பதன் சிதைவு; மகிஷம்-எருமை) என்ற பகுதியில் நிலவிற்று. சங்க காலத்துக்குப் பின், ஓய்சளர் ஆட்சிக் காலக் கல்வெட்டுகளிலும் இப் பெயர் காணப்படுகிறது. இவ்வேள்புலத் தலைவன் எருமையூரன் என்று குறிக்கப்பட்டான். இவ் வேள்புலப் பெயராலேயே (மைசூர் என்ற வடிவில்) அணிமைக் காலம் வரை கன்னட மாநிலத்தின் பெரும் பகுதியளாவிய ஒரு தனியரசும் ஒரு தனி மாநிலமும் அமைக்கப் பெற்றிருந்தன.

சங்ககால வேளான எருமையூரனின் ஆட்சி, ஒருபுறம் வடக்கே அந் நாளைய வடுக எல்லைவரையும், மற்றொரு புறம் மேற்கே 'குடகு நாடு' வரையிலும் பரவியிருந்தது. சேர நாட்டில் ஓர் அயிரைமலையும் ஓர் அயிரையாறும் இருந்தது போல, அவன் ஆட்சியெல்லையிலும் அதன் பெயரை நினைவூட்டும் முறையில் ஓர் அயிரிமலையும் ஓர் அயிரியாறும் இருந்தன.

தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை இரு முடியரசருடன் சேர்ந்து எதிர்த்த வேளிர் ஐவருள் எருமை யூரனும் ஒருவன்.

பிற வடகொங்குப் பகுதிகளுடன் அவற்றுள் ஒன்றாக இவ் வேளிர் புலமும் கொங்குப் பேரரசுட்பட்டது,

கங்கர் என்ற வேள் மரபினர், பண்டை வடகொங்கு நாட்டில், கங்கநாடு அல்லது கங்கவாடி என்றழைக்கப்பட்டதலைக்காட்டுப் பகுதியை ஆண்டனர்.பின்னாட்களில் கங்கவாடியை மட்டுமன்றி அதனுடன் தற்காலக் கொங்கு நாட்டையும் சேர்த்து அரசு வல்லரசாக, சிலகாலம் பேரரசு அல்லது பேரரசுகளாக ஆண்ட கங்கப் பெருமரபினர் இவர்களே. முற்கால வேளிர் தலைவர் கங்கன் என்றும் கங்கர் என்றும் (ஒருமையிலும் பன்மை யிலுமாகவே) அழைக்கப்பட்டனர்.