உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
222 ||

அப்பாத்துரையம் - 14



||_


அவன் சங்க கால அரசன் மட்டுமல்லன், சங்க காலப் புலவனும் ஆவான். பாலை பாடிய பெருங்கடுங்கோ, மருதம் பாடிய இளங் கடுங்கோ ஆகிய பேரரசப் பெரும்புலவர் புகழின் ஒரு சுடர்ப் பொறியாக அவன் விளங்கினான்.

முந்திய பேரரசனைப் போல வெற்றி விரவிய தோல்வி யன்று, கலப்பற்ற தோல்வியே கண்ட பேரரசன், கணைக்கால் இரும்பொறை. ஆனால், இது அவன் வீரத்தின் குறையன்று, பேரரசுச் சூழலின் குறையே யாகும். பேரரசின் சரிவைத் தடுத்து நிறுத்தும் ஆற்றலுடையவனாகவே அவன் ஆட்சிதொடங்கினான் என்பதை அவன் அவைப் புலவரான பொய்கையார் பாடிய நற்றிணைப் பாடல் (18) காட்டுகிறது. பேரரசினை எதிர்த்த மூவன் என்ற (வேளிராகவே கருதத்தக்க) தலைவனை அவன் கொன்றழித்து மற்றையோர்க்கு எச்சரிக்கையாய் உதவும்படி அந்த மூவனின் பற்களை மேல்கரைத் தொண்டித்துறை முகவாயிலில் பதித்து வைத்தான் என்று அப்பாடல் கூறுகிறது.

இது பேரரசன் வீர ஆற்றலை மட்டுமன்றி, அவன் ஆட்சித் தொடக்கத்திலும் பேரரசுக்கிருந்த ஆற்றலையும் விரிவகற் சியையும் எடுத்துக் காட்டுவது ஆகும். ஏனெனில், பேரரசின் தொலைக் கோடியாகிய மேல் கடற்கரைவரை அவன் நில ஆட்சி மட்டுமின்றிக் கடலாட்சியும் எட்டியிருந்தது என்பதை இது காட்டுகிறது.

சங்க கால இறுதி நாட்களில் வாழ்ந்து, இன்றளவும் தமிழரால் மறக்க முடியாத பொன்றாப்புகழ் நிறுவிய பேரரசன் சோழன் செங்கணான். சங்க காலப் புகழ்வானின் மாலை வெள்ளி அவன். தொடக்கக் காலச் சைவ நாயன்மார், மாணிக்கவாசகப் பெருமான், தொடக்கக் கால வைணவ ஆழ்வார்கள் ஆகியோருக்குக்கூட அவன் முந்தியவனாய், ஒருவேளை அவர்க ளுக்கே மூல மரபினனாகக்கூட விளங்கியவன் ஆவான். காவிரி இருகரையும் (கொங்கு நாடெங்கும்) எழூபதுக்கு மேற்பட்ட சிவபெருமான் திருக் கோயில்களை எழுப்பிக் கொங்கு நாட்டைச் சிவத்திரு நாடாக்கியவன் அவன் கொங்குப் பேரரசின் புற வீழ்ச்சிக்கு (அக வீழ்ச்சியாகக் கூறக் கூடிய குடியரசுப் பண்பு வீழ்ச்சி என்றும் நிகழ்ந்து விடாத ஒன்று) வழிவகுத்த வெற்றி அவன் வெற்றியே!