உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பாண்டியர் வரலாறு

99

செலுத்த வன் வேந்தர் வேந்தனாய் வீற்றிருந்து செங்கோல் செலுத்தியவனாதல் வேண்டும். அதுபற்றியே, 'எம்மண்டலமுங் கொண்டருளிய ஸ்ரீ சுந்தரபாண்டிய தேவர்' என்று இவன் வழங்கப் பெற்றனன். இவன் மெய்க்கீர்த்தி ‘பூமலர்வளர் திகழ் திருமகள் புகழாகம் புணர்ந்திருப்ப" என்று தொடங்குகின்றது. சிறந்த இம்மெய்க்கீர்த்தி இவனுடைய வீரச்செயல்களையும் இவன் வென்ற நாடுகளையும் செய்த திருப்பணிகளையும் கூறுவதால் இவன் வரலாற்றை ஆராய்வதற்கு இது பெரிதும் பயன்படுவதாகும். திருவரங்கத்தில் வடமொழிச் சுலோகங் களில் வரையப் பெற்றுள்ள இவன் கல்வெட்டொன்று,' இவனுடைய அறச்செயல்களையும் வீரச்செயல்களையும் நன்கு விளக்குகின்றது. 'சமஸ்த ஜகதாதார சோமகுலதிலக' என்று தொடங்கும் இவன் கல்வெட்டுக்களில் இவனுடைய வீரச் செயல்களும் சிறப்புப்பெயர்களும் குறிக்கப்பட்டிருத்தல் அறியத்தக்கது. இவன் புரிந்த திருப்பணிகளையும் அறங்களையும் விளக்கும் சில செந்தமிழ்ப்பாக்கள் சிதம்பரம் திருப்புட்குழி முதலான ஊர்களிலுள்ள கோயில்களில் பொறிக்கப்பட்டுள்ளன. இவற்றையெல்லாம் துணையாகக்கொண்டு இவன் ஆட்சியில் நிகழ்ந்தவற்றை ஆராய்வோம்.

இவ்வேந்தன் முதலில் சேரநாட்டின்மேல் படை யெடுத்துச் சென்று சேரமன்னனோடு போர் புரிவானாயினன்; அவன் இவனை எதிர்த்துப் போர்புரியும் ஆற்றலின்றிப் புறங்காட்டியோடவே, மலைநாட்டைக் கைப்பற்றித் தன் ஆட்சிக்குள்ளாக்கினான். இவன் காலத்தில் சேரநாட்டில் அரசாண்ட வீர ரவி உதயமார்த்தாண்ட வர்மன் என்பவனே இவன்பால் தோல்வியுற்ற சேரமன்னனாக இருத்தல் கூடும்.5 தக்க சான்றுகள் கிடைக்காமையால் ஒருதலையாகத் துணிதற் கியலவில்லை.

1.S.I.I., Vol. V, No. 459.

2. Ep. Ind, Vol. III, No.2.

3. S. I. I., Vol. VII, Nos. 429 and 446; Ibid, Vol. VIII No. 436.

4. S. I. I., Vol. IV, Nos. 618-620.

5. Annual Report on South Indian Epigraphy for 1926-27, page 92.