உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144

தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8


மணிவாசகப் பெருமான் திருவாய்மலர்ந்தருளிய திருச்சிற்றம்பலக்கோவையார், அகப்பொருளி யலுக்கு மாறுபடுகின்றமையின் குற்றமுடைத்தென்று கடைச்சங்கப் புலவர்கள் கூறிய கடுமொழியைக் கேட்கப் பொறாது, அன்னோர் கூற்றை மறுத்து, அப்புலவர்களோடு முரண்பட்ட கல்லாடர் என்பார் ஆலவாயில் அருட்பெருங்கடவுளின் றிருவருள்பெற்றுத் திருச்சிற்றம்பலக் கோவையாரின் மாட்சியுந் தெய்வத் தன்மையும் அன்னோர்க்கு நன்கு புலப்படுத்துவான், அந்நநூலினின்று ஒருநூறு செய்யுட் களைத் திரட்டி அவற்றின் கருத்துக்களக்கப்பட இந்நூலையியற்றி, அப்புலவர்களைக் கூட்டிச்சென்று, இறைவன்றிருமுன்னர் ஓதியபோது அப்பெருமான் சால மகிழ்ந்து ஒவ்வொருபாவும் முடியுந்தோறும் தந்திருமுடியைத் துளக்கி யருளினாரென்றுஞ் சிலர் கூறுப. இக்கூற்றை மேலேவரைந் துள்ள வெண்பா ஆதரிக்கின்றது. ஆனால் கடைச் சங்கப் புலவர்கள் திருச்சிற்றம் பலக்கோவையார் குற்றமுடைத் தென்று கூறினரென்பது சிறிதும் பொருந்த வில்லை; எங்ஙனமெனில் மணிவாசகப் பெருமான் கடைச்சங்க காலத்திற்குப் பிந்தியவர்களென்பதற்குப் பிரமாணம் அவர்கள் வாக்கினின்றே நாம் காட்டலாம்.[1] அன்றியும், திருச்சிற்றம்பலக் கோவையார்க்குச்


  1. “சிறைவான் புனற்றில்லைச் சிற்றம்பலத்து மென்சிந்தையுள்ளு
    முறைவானுயர்மதிற் கூடலினாய்ந்த வொண்டீந்தமிழின்
    றுறைவாய்நுழைந் தனையோவன் றியேழிசைச்சூழல்புக்கோ
    விறைவாதடவரைத் தோட்கென்கொலாம்புகுந் தெய்தியதோ”....என்னுந் திருக்கோவை யாரிற் காணப்படும் இச்செய்யுளில் மணிவாசகப்பெருமான் கூடன் மாநகரில் நிலவிய கடைச்சங்கத்தைக் குறித்திருக்கின்றனர். முந்தியசங்கங் களிரண்டும் கடலாற்கொள்ளப் பட்ட தென்மதுரையகத்தும் கபாடபுரத்தும் விளங்கியமையால்,கூடலில் 'ஒண்டீந் தமிழாய்ந்த’சங்கம் கடைச்சங்க மாகத்தா னிருத்தல் வேண்டும். அன்றியும் ஆய்ந்த வொண்டீந்தமிழ்' என்னுஞ் சொற்றொடரினால் சுவாமிகள் காலத்து அச்சங்கம் நடைபெறவில்லை யென்பதும் நன்குவிளங்கும். நிற்க, காலஞ்சென்ற திருவனந்தபுரம் ப்ரொபெஸர் சுந்தரம்பிள்ளை அவர்கள் கூன்பாண்டியனும் திருஞானசம்பந்த சுவாமிகளும் கி.பி. ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதியில் விளங்கியவர்களென்று நிரூபணஞ் செய்துள்ளனர். இக்கூன்பாண்டியற்குப் பத்துத்தலைமுறைகட்கு முன்னிருந்த அரிமர்த்தன பாண்டியனே நம் மாணிக்கவாசக சுவாமிகளை மந்திரியாகக்கொண்டவனென்பது திருவிளையாடற் புராணத்தா லறியப்படுகிறது. தலைமுறை ஒன்றிற்குச் சராசரி ஆட்சிக்காலம் 25 வருடமாக 10தலைமுறைகட்குச் சென்றது 250வருடங்களாம். இவ்விரு நூற்றைம்பதைக் கூன்பாண்டியன் காலமாகிய அறுநூற்றுமுப்பதில் கழிக்க எஞ்சியது முந்நூற்றெண்பதாம். இதனால், மாணிக்கவாசக சுவாமிகளும் அரிமர்த்தன பாண்டியனும் கி.பி. நான்காம் நூற்றாண்டினிறுதியில் விளங்கியவர்களென்பது புலப்படுதல் கண்டுகொள்க.