உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

140

தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8


அரங்கேற்றி யுள்ளாரென்பது, அச்சங்கத்துச் சான்றோர் அதனைத் தங்கள் செவியாரக் கேட்டு மனமார வுவந்து வாயாரப் புகழ்ந்துபாடியுள்ள திருவள்ளுவ மாலைப் பாடல்களால் நன்கு விளங்கும். மூன்றாஞ்சங்கம் கி.பி. 2-ஆம் நூற்றாண்டிலும் அதற்கு மத்தியகாலங்களிலும் நின்று நிலவிய தாகலின் அச்சங்கத்திறுதிக்காலத்தில் தம் நூலையரங் கேற்றிய திருவள்ளுவனாரும் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் விளங்கியவராகற்பாலர். இதுகாறுஞ் செய்த வாராய்ச்சியால், திருக்குறளருளிய திருவள்ளுவனார் கி.பி. 2-ஆம் நூற்றாண்டிலும் இராமாவதார மருளிய கம்பர் கி.பி. 12-ஆம் நூற்றாண்டினிடையிலும், நைடதமி யற்றிய அதிவீரராம பாண்டியர் கி.பி. 16-ஆம் நூற்றாண்டினிறுதியிலும் வாழ்ந்தவர் களென்பது நன்கு வெளியாதல் காண்க.

இதனால், கம்பரும் அதிவீரராமபாண்டியரும் திருவள்ளுவனார்க்குப் பல நூற்றாண்டுகட்குப் பிற்பட்டவர்களென்பது இனிது விளங்கும். ஆகவே, மேற்கூறிய கம்பரையும் அதிவீரராம பாண்டியரையும் தம் ஞான வெட்டியில் நிந்தித்துப் போந்த ஆசிரியர் திருக்குறளருளிய திருவள்ளுவனாரென்று கூறல் சிறிதும் பொருந்தாதென்க.

அன்றியும், திருக்குறளுக்குச் சிறந்தவுரைவரைந்தவரும் இருபெரு மொழியினும் நுண்மாணுழை புலன் படைத்த பேரறிவு வாளருமாகிய ஆசிரியர் பரிமேலழகர் நம் தெய்வப் புலவரியற்றிய வேறு நூல்களிருப்பின், திருக்குறளுக்குத் தாம் எழுதியவுரையில், அந்நூல்களிலிருந்து ஆங்காங்கு மேற்கோள்கள் எடுத்துக்காட்டி ஆசிரியர்கருத்தை விளக்கிச் செல்வார். அவர் அங்ஙனம் எடுத்துக்காட்டாமையால் நமது பெருநாவலர் திருக்குறளைத் தவிர வேறுநூலொன்றும் இயற்றினாரில்லை யென்பது நன்குபுலனாம்.

இனி, ஞானவெட்டியின் ஆசிரியர் தம்நூலிற் சில பெரியோர்களை நிந்தித்திருப்பது போல் வேதத்தையும் அந்தணரையும் பல்காலும் நிந்தித்திருக்கின்றனர். நமது திருவள்ளுவனார் அங்ஙனம் செய்யாரென்பது.