உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

166

தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8


அன்றியும், பாண்டி மன்னன் ஒருவன் மதுரை யம்பதியில் தான் வீற்றிருந்து செங்கோல் செலுத்திய அரியணைக்கு ‘இசையளவு கண்டான்‘ எனப் பெயரிட்டிருந்தனர் என்று சோழவந்தானுக் கண்மையிலுள்ள தென்கரையில் காணப்படும் கல்வெட்டொன்று உணர்த்துகின்றது.[1] எனவே, பாண்டியர்க்கு அக்காலத்தில் இசையளவு கண்டான் என்ற பட்டம் வழங்கி வந்தமை காண்க.

கி.பி. ஏழாம் நூற்றாண்டின் இடையில் சோழ நாட்டில் சீகாழிப் பதியில் தோன்றியருளிய திருஞான சம்பந்தப் பெருமான் தம் மூன்றாம் ஆண்டில் அருட்பாக்கள் இயற்றத் தொடங்கி, அவற்றைத் தமிழ்ப் பண்களில் பாடித் தமிழிசையைத் தமிழகம் முழுதும் பரப்பி வருவாராயினர். அவ்வடிகளோடு உடன் சென்ற திருநீலகண்ட யாழ்ப்பாணரும் அவர் மனைவியார் மதங்க சூளாமணியாரும் அவ்வருட்பாடல்களைத் தம்யாழில் அமைத்துத் தமிழ்ப் பண்களில் பாடி வந்தனர். அந்நூற்றாண்டில் விளங்கிய திருநாவுக்கரசு அடிகளும் தம் அருட்பாக்களைத் தமிழ்ப் பண்களில் பாடித் தமிழிசையை யாண்டும் பரப்பினர். அந்நாட்களில் தொண்டை நாட்டையும், சோழநாட்டையும் ஒருங்கே ஆட்சிபுரிந்த பல்லவ மன்னனாகிய முதல் மகேந்திரவர்மன் என்பான் இசைச்கலையில் புலமையுடைவன் ஆதலின் இசைத் தமிழைப் போற்றி வளர்த்து வந்தான். ஆகவே, தமிழ்நாடு முழுவதும் தமிழிசை உயர்நிலை எய்திற்று. மேலே குறிப்பிட்ட சைவப் பெரியார் இருவரும் பத்தி நெறியைத் தமிழிசை மூலமாக நாட்டில் பரப்பி வந்தமை உணரற்பாலது.

கி.பி. எட்டு ஒன்பதாம் நூற்றாண்டுகளில் சுந்தர மூர்த்திகளும் பெரியாழ்வார், குலசேகர ஆழ்வார், திருமங்கை மன்னன், சடகோபர் ஆகிய திருமாலடியார்களும் அருட்பாக்கள் பாடித் தமிழிசையையும் பத்தி நெறியையும் வளர்த்து வந்தனர்.

கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் முதல் ஆதித்த சோழனால் நம் தமிழகத்தில் சோழர் பேரரசு நிறுவப் பெற்றது. சோழமன்னர்களின் ஆட்சியும் கி.பி.பதின்மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதி வரையில் சற்றேறக்குறைய 400 ஆண்டு


  1. Inscription No. 130 of 1910.