உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கெஞ்சிக் கதை

97

இது அவள் போக்கை முற்றிலும் நாட்டுப்புற நங்கையின் போக்காகவே ஆக்கிற்று.

இயல்பாக அவள் மென்னடையுடையவள். நல்லிணக்க முடையவள். ஆனால், அன்று அந்நிலையில் அவள் தன் உள்ளுணர்ச்சிகளை அடக்கிக் கொண்டு சமுகக் கட்டுப் பாட்டை எண்ணித் தன் இதயத்தை எஃகாக்கிக் கொண்டாள். இம்முயற்சி அவளுக்குச் சொல்லொணா வேதனையே தந்தது. வாய் மொழிகளால் கெஞ்சியின் வாதங்களுக்குத் தன்னால் தக்க பதில் கூற முடியா தென்று உணர்ந்து அவள் தன் முனைப்பழிந்து கலங்கிக் கண்ணீர் வடித்தாள். அது கண்டு அவன் கடுந்துயர் அடைந்தான்.ஆயினும் அந்நிலையில் கூட அத்தகைய காட்சியை எக்காரணம் கொண்டும் தவிர்க்க அவன் விரும்பவில்லை. அதுவே அவள் கவர்ச்சியைப் பன் மடங்கு பெருக்கி, அவள் அருமையையும் உயர்த்திற்று. ஆயினும் அப்படியும் அவளுக்கு ஆறுதல் கூற அவன் விரைந்தான், எப்படி ஆறுதல் கூறுவது என்று மட்டுந்தான் அவனுக்குத் தெரியவில்லை.

இறுதியில் ஆறுதல் முயற்சியையே விடுத்து அவளைக் கடிந்து கொள்ளத் தொடங்கினான் என்னிடத்தில் ஏன்

இப்படிக் கல் நெஞ்சுடன் நடந்து கொள்கிறாய், அன்பே! உன்னை நான் சந்தித்தவகை சிறிது புதுமை வாய்ந்த தென்பதை நான் ஒத்துக்கொள்கிறேன். ஆயினும் இச்சந்திப்பு ஊழியின் செயலென்றே எண்ணுகிறேன். அப்படியிருந்தும் உலகத் தொடர்பே அற்றவள் போல் என்னிடமிருந்து இப்படி அஞ்சி அஞ்சி விலகுவது எவ்வளவு கொடுமை?' என்றான்.

அவள் அழுது கொண்டே புலம்பினாள்.

'நான் தொல்லைகளுக்கு ஆட்படுமுன் இது நிகழ்ந் திருந்தால், என் தலைவிதியின் சீட்டு என் மீது விழுமுன் நடைபெற்றிருந்தால், உங்கள் நல்லெண்ணம் எவ்வளவு தற்காலிகமானதா யிருந்தாலும், அது நீடிக்கும் வரை அதை மகிழ்வுடன் நுகரத் தயங்கி யிருக்க மாட்டேன். நீங்கள் உங்கள் இடம் பெயர்ந்து இறங்கிவரும் புது வகைக் கருணையை மீண்டும் எண்ணிப் பார்த்து எனக்கு முழு நீதி செய்வீர்களென்றும் மனமார நம்பியிருப்பேன். ஆனால், இப்போது என் போக்கின் திசை நிலைபெற்று உறுதி யடைந்து விட்டது. இத்தகைய