உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




6

172) ||__ _

அப்பாத்துரையம் - 22

துறவு நங்கையின் குடில் மரத்தாலமைந்த வீட்டினரு கேயுள்ள ஒரு கோவிலுடன் இணைந்திருந்தது. குடில் மிகத் தன்னந்தனியான பாழிடமேயானாலும் கோவில் மிக அழகு வாய்ந்ததாயிருந்தது. வருபவர் பந்தங்களின் ஒளி அதன் திறந்த வாயிலில் வீசிற்று. உள்ளறையில் தனித்து அழுது புலம்பிக் கொண்டிருந்த ஒரு பெண் குரலன்றி வேறு குரலில்லை. வெளியறையில் பல புரோகிதர்கள் ஒருங்குகூடிப் பேசிக் கொண்டோ, தொழுதுகொண்டோ இருந்தனர். பக்கத்திலுள்ள கோவில்களில் காலைவழிபாடு முடிந்து அமைதி நிலவிற்று.சிறிது தொலைவில் புண்ணியத் தலமாகிய கியோமிசுவில் மட்டும் போரொளியும் அதனைச் சூழ்ந்து மக்கள் திரளும் காணப்பட்டன.

முதுமைவாய்ந்த துறவுமாதின் புதல்வனே தலைமைப்

புரோகிதனாய் இருந்தான். அவன் திருநூலின் வாசகங்களைக் கம்பீரமான தொனியில் படித்துக் கொண்டிருந்தான். அதைக் கேட்கும்போதே கெஞ்சியின் கண்களில் நீர் ததும்பிற்று. அவன் உள்ளே சென்றான். உகான் ஒரு தட்டியின் பின்புறம் படுத்திருந்தாள். கெஞ்சி வருவதறிந்தே, அவள் விளக்கைச் சுவரின் பக்கமாகத் திருப்பிக் கொண்டாள். என்ன பயங்கர மாறுதலைத் தன்னிடமிருந்து மறைக்க எண்ணினாளோ என்று கெஞ்சி வியந்தான்.

அருகே வந்தபோது அணங்கின் தோற்றத்தில் எத்தகைய மாறுதலும் இல்லாதது கண்டு ஆறுதலடைந்தான். அவள் அமைதியுடனும் அழகொளியுடனும் உறங்குவது போலவே கிடந்தாள். அச்சமோ, நடுக்கமோ ஏதுவும் தேவையற்ற நிலையில், அவள் கையைத் தன் கையால் பற்றி மனமுருகிப் புலம்பினான்: ஒரு தடவை என்னிடம், வாய் திறந்து, பேச மாட்டாயா? மிகக் குறுகிய காலமே என்னிடம் வந்து என் நெஞ்சில் மகிழ்ச்சி நிரப்பி, உன்னிடம் இவ்வளவு பாசங்கொண்ட என்னை இவ்வளவு விரைவில் ஏன் விட்டகன்றாய்?' என்று மாழ்கினான். அருகிலிருந்தவாறே அவன் நெடுநேரம் மனங்கசிந்து அழுதான்.

அவள் யார் என்று புரோகிதர்களுக்குத் தெரியாது. ஆனால் அவனிடம் காணப்பட்ட ஆழ்ந்த மனமார்ந்த துயர் அவர்கள் கண்களிலும் நீர் ததும்ப வைத்தது.