உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 3.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
22

❖ மறைமலையம் - 3 ❖

வராமையால், சப்தம் இடாமல் அடிமேல் அடிவைத்துப் போய் அவ்வறைக்கதவில் சாவித் துவாரத்தின் வழியாக உள்ளே நோக்கினாள். நோக்க, அப் பெரியவர் ஒரு சாய்வான நாற்காலியில் பிணம்போற் சாய்ந்திருக்கக் கண்டாள். அதைப் பார்த்ததும் இன்னது செய்வது என்று அறியாளாய்த் தான் முன்னிருந்த இடத்தில் வந்து, மிக்க விசனத்தோடும் உட்கார்ந்துகொண்டு சிந்தித்திருந்தாள். இவள் இப்படி உட்கார்ந்திருந்த சில நிமிஷங்கட்கெல்லாம் மறுபடியும் அவ்வறையின் கதவு திறக்கப்பட்டது; உடனே அப் பெரியவர் அப்பெண்ணிடம் வந்து, “அம்மா நின் கணவன் இலண்டன் மாநகரத்தில் சுகமாக இருக்கின்றார்; இப்போது தான் நான் அவரை ஒரு வசதியான சாப்பாட்டு விடுதியில் சந்தித்தேன்; சந்தித்து, ‘நீர் அமெரிக்காவிலுள்ள உம் மனைவிக்கு நெடுங்காலமாகக் கடிதம் எழுதாதிருப்பது பிசகு; அந்த அம்மை இதனால் மிகவும் விசனம் அடைந்திருக்கிறாள்’ என்று சொன்னேன். அதன்மேல் அவர் கடிதம் எழுதியிருக்கிறார்; அஃது உனக்கு இந்தக் கப்பலில் வரும்; அதற்கு அடுத்த கப்பலில் உன் கணவனே உன்னிடம் வந்து சேர்வார்,” என்று கூறினார். இவ்வமுத வாசகத்தைக் கேட்டதும் அந்தப் பெண் மிகவும் மனம் மகிழ்ந்து அப்பெரியவருக்கு வந்தனஞ் செய்து தன் வீட்டுக்குப் போயினாள். அப்பெரியவர் சொல்லியபடியே இரண்டொரு தினத்தில் வந்த கப்பலில் தன் கணவனிடமிருந்து அவளுக்குக் கடிதம் வந்தது; அதற்கு அடுத்த கப்பலில் கணவனும் வந்து சேர்ந்தான். அந்தப் பெண் இவற்றையெல்லாம் பார்த்துப் பேரதிசயம் அடைந்தவளாய்த் தன் கணவனிடம் இதனைத் தெரிவியாமல், அவனை அழைத்துக் காண்டு அப்பெரியவரிடம் போனாள். அவள் கணவன் அப்பெரியவரைக் கண்டதும் ஆச்சரியம் அடைந்து, இலண்டன் மா நகரத்தில் நானிருந்த ஆகார விடுதிச் சாலையில் இப் பெரியவரைச் சில வாரங்களுக்கு முன் சந்தித்தேன்; நான் உனக்கு நெடுநாளாய்க் கடிதம் எழுதாமல் இருந்து விட்டமையால் நீ விசனமாய் இருப்பதாயும் உடனே கடிதம் எழுதுவதோடு சீக்கிரம் உன் மனைவியிடம் போய்ச்சேர் என்றும் சொல்லிப் போனார் என அவளிடம் கூறினான். பின் அவ்விருவரும் அப் பெரியவரை வணங்கி அவரால் ஆசீர்வதிக்கப்பெற்று வீட்டுக்குத் திரும்பினார்கள். இஃது உண்மையாக நடந்த காரியம். இதில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/55&oldid=1628294" இலிருந்து மீள்விக்கப்பட்டது