உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 3.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ மரணத்தின்பின் மனிதர்நிலை ❖
23

சம்பந்தப்பட்டவர்கள் பேர், இடம், இது நடந்த நாள் முதலியனவெல்லாம் அனாவசியமென்று யாம் இங்கே காட்டவில்லை.

இதனால் அறியவேண்டும் உண்மைகளே இங்குக் கவனிக்கத்தக்கன. அமெரிக்கா தேசத்திற்கும் இலண்டன் மாநகரத்திற்கும் எத்தனையோ ஆயிர மைல் தூரம் இருக்கின்றது; அத்தனை ஆயிரமைல் தூரத்தையும் மேற்சொன்ன பெரியவர் தமது சூக்குமசரீரத்தால் ஆகாய வழியே சில நிமிஷங்களிற் கடந்துசென்றார். பிறகு அவள் கணவன் கண்ணெதிரே அச்சூக்குமசரீரத்தையும் புலப்படும்படி செய்து அவனோடு சம்பாஷணையும் நடத்தினார். இதில் இன்னும் ஒரு விசேடமும் கவனிக்கத்தக்கது. அவள் கணவன் இலண்டனிற் கண்ட அப் பெரியவரின் சூக்குமசரீரத்தின் வடிவும், திரும்ப அவரை அமெரிக்காவில் பார்த்தபோது கண்ட தூலசரீரத்தின் வடிவும் ஒன்றாயிருந்தன என்றமையால், சூக்குமசரீரமானது தூல சரீரத்தின் வடிவையே முழுதும் ஒத்திருக்கும் என்பது இனிது பெறப்படுகின்றது. அவையிரண்டும் அங்ஙனம் வடிவத்தால் ஒத்திருந்தாலும், தூலசரீரம் கனமுடையதாய் நிலத்தில் மாத்திரம் சஞ்சரிக்கக்கூடியது; சூக்குமசரீரமோ கனமில்லாத மெல்லிய பொருளாய் அந்தரத்தில் மாத்திரம் இயங்கவல்லதா யிருக்கின்றது. ஆகையினாலேதான், சூக்குமசரீரத்தில் உலாவும் பேய்களுக்கும், தேவர்களுக்கும் கால் நிலத்திற் பாவாது என்று சாமானிய சனங்களும் சொல்லுகிறார்கள்; அஃது உண்மையேயாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/56&oldid=1628295" இலிருந்து மீள்விக்கப்பட்டது