❖ மரணத்தின்பின் மனிதர்நிலை ❖ |
கையைப் பிடித்து எழுதிய முதற் கடிதம் முடிவு பெறுகின்றது. இன்னும் இப்படியே பரிசுத்த சிந்தையுடைய இம் மாதரார் எழுதிய கடிதங்கள் பல இருக்கின்றன. இம் மாதரார் இன்னும் ஸ்டெட் துரையவர்களுக்குக் காலங்கள்தோறும் அரிய பெரிய மெய்ப்பொருள்களை எழுதி உதவிபுரிந்து வருகின்றார். சில நாட்களுக்குமுன் யூலியா என்னும் இம் மாதரார் உதவியால் ஸ்டெட் துரையவர்கள், காலஞ்சென்ற நம் விக்டோரியா அரசியாரவர்களிடம் முதன் மந்திரியாயிருந்து இறந்துபோன கிளாட்ஸ்டன் துரையவர்களின் ஆவேசத்தோடு 1909ஆம் வருடம் அக்டோபர் மாதம் 30ஆந் தேதி நடாத்திய உரையாடலின் விரிவை இங்கிலாந்து தேசத்திற் பிரசுரமான ஆங்கிலப் பத்திரிகைகளினும் இவ்விந்தியா தேசத்திற் பிரசுரமான ஆங்கிலப் பத்திரிகைகளுடன் பிரகடனம் பண்ணியிருந்தார்கள். இங்கிலாந்தில் நடைபெறும் தினசரி வர்த்தமானம் என்னும் பத்திரிகையின் ஆசிரியர் ஒருநாள் ஸ்டெட் துரையவர்களிடம் சென்று, இப்போது எல்லாருடைய மனத்தையுங் கவர்ந்திருக்கும் அரசாங்க காரியங்களைப்பற்றிச் சூக்கும சரீரத்தில் வசிக்கும் கிளாட்ஸ்டன் மந்திரியாரின் அபிப்பிராயங்கள் இவையென்று யூலியாவின் உதவியினால் தெரிந்து சொல்லும்படி அவரை வேண்டினார். அவருடைய வேண்டுகோளுக்கு ஸ்டெட் துரையவர்கள் இசைந்து சூக்கும சரீரத்தில் வசிக்கும் யூலியாவுக்கு இதனை எவ்வாறிருந்து அறிவிக்க வேண்டுமோ அவ்வாறு அறிவித்தார். ஸ்டெட் துரையவர்களுக்கும் ஆவேச உலகத்திற் சூக்கும சரீரத்திலிருக்கும் யூலியா முதலானவர்களுக்கும் உரையாடல் நடந்தேறுகையில் பலர் அவருடன் கூட இருந்து இவ்வதிசய சம்பவத்தைப் பார்த்தார்கள்.
அன்று காலையிற் சூழவிருந்தவர்களில் ஆவேசங் கொள்வோன் ஒருவன் வழியாக யூலியா என்னுஞ் சூக்கும தேக மாதரார் சொன்னதாவது: ‘கிளாஸ்டன் துரை அவர்களை நான் அழைத்து வரலாமென்று எண்ணினேன்; ஆனால், அவர் மறுபடியும் இந்த மண்ணுலகத்திற்குத் திரும்பிவர மனம் இல்லாதவராயிருத்தலின் அது மிக மிகக் கடினமாயிருக்கிறது,’ என்பதேயாம்.