உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 3.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
72

❖ மறைமலையம் -3 ❖

இயைபில்லாதனவாகலின் இவ்வளவோடும் இச் சரித்திரப் பகுதியினை நிறுத்திக் கொள்கின்றாம்.

இந்த நிகழ்ச்சியைக் கொண்டு தெரிந்துகொள்வது யாது? தான் அறியாமல் தன்னை ஒருவன் கொலை செய்தாலும் கொல்லப்பட்டவனுடைய உயிர் சூக்குமசரீரத்திற் சென்றவுடனே தன்னைக் கொன்றவன் இன்னானென்பதை எளிதில் அறிந்து அவனைப் பழிக்குப்பழி வாங்கித் தண்டிக்கும் பொருட்டு ஆவேச உருவில் வெளிப்பட்டு உயிரோடிருக்கும் ஏனையோர்க்குக் கொலை வரலாறு முழுதும் அறிவிக்க வல்லதாகும் என்பதே. கொலை செய்யப்பட்டவன் தீயனா யிருந்தால் அவனுயிர் சூக்குமசரீரத்திற் சென்றவுடன் கொலை வரலாற்றைப் பிறர்க்கு அறிவித்துத் தண்டிக்கும் நியாயவுணர்ச்சி இல்லாமல், தானே கொலை செய்தவனைப் பிடித்துக்கொண்டு அல்லும் பகலும் இடைவிடாது அவனைத் துன்புறுத்திவரும். நல்லவனுயிரோ அங்ஙனம் தானே அவனைத் துன்புறுத்துதற்கு விருப்பமில்லாமல் நீதி மிகுந்து, நியாயம் அறியவல்லார்க்குக் கொலை வரலாற்றை அறிவித்து அவனைத் தண்டிக்கும். ஹாம்லெத் அரசன் மிகவும் நல்லவனாகையால் தன்னைக் கொலை செய்த தம் தம்பியைத் தானே பற்றிக்கொண்டு வருத்தாமல், தன் மகனுக்குத் தான் இறந்த வரலாற்றை அறிவுறுத்தி, அவனைக் காண்டு அக் கொலைஞனைத் தண்டிக்கலாயிற்று. இவ்வாறே நமது இவ் விந்திய நாட்டில் நடக்குஞ் சம்பவங்களும் பல உண்டு. அவற்றுள் ஒன்று இங்கெடுத்துக் காட்டுகின்றாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/105&oldid=1623396" இலிருந்து மீள்விக்கப்பட்டது