உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 3.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
90

❖ மறைமலையம் - 3 ❖

யெல்லாம், நம் கண்ணெதிரே விரிக்கப்பட்ட புத்தக எழுத்துக்கள் போல, அவ்வறக் கடவுளின் திருவுளக் கண்ணெதிரே திறக்கப்பட்டுக் கிடக்கும். அவ்வாண்டவனுக்கு, நம்மனோர்க்கு இருப்பனபோற் புறக்கண்ணென்றும் அகக்கண்ணென்றும் இருவேறு வகையான கண்கள் இல்லை. அவருடைய அகக் கண்ணும் புறக்கண்ணும் ஒரே இயல்பினவாய், ஒன்றிற் புலப்பட்ட காட்சிகள் மற்றையதிலும் உடனே புலப்படுமாறு அமைந்திருக்கும். நம்முடைய புறக்கண்களுக்கு ஒரு பொருளின் வெளிப்பக்கம் மாத்திரமே காணப்படுவதாயிருக்கும்; அதன் உட்பக்கமும், மற்ற மூன்று பக்கங்களும் காணப்படமாட்டா. மற்று அவ் வாண்டவன் கண்களுக்கோ எல்லாப் பொருள்களின் எல்லாப் பக்கங்களும் ஒரே முறையில் செவ்வையாக விளங்கித் தோன்றும். இருந்த விடத்தில் இருந்தே ஏனை எல்லா விடங்களினும் நிகழும் நிகழ்ச்சிகளெல்லாம் காண்டற்குரிய இத் தெளிவுக் காட்சி இங்குள்ள மாந்தர் சிலரிடத்துஞ் சிற்சில சமயங்களிற் காணப்படுவதுண்டு. தேசோமயமான சூக்குமசரீரத்தில் அமைந்த இத் தெளிவுக்காட்சியானது, அச் சூக்கும சரீரங்களோடு தூலசரீரத் தொடர்பும் உடைய மக்களிடத்துத் தன்ஒளி மழுங்கி மறைந்து நிற்கின்றது. இங்ஙனம் இது மறைந்து நிற்பதனாலேதான் மிக மறைத்துச் செய்யும் வினைகளையும் உடனே தெரிந்து கொள்ளுதற்குரிய இத் தெளிவுக்காட்சி ஒன்று உண்டென்பதனையும், இக் காட்சியினையுடைய தேவர்கள் முனிவர்கள் சித்தர்கள் முதலான சூக்குமசரீர வாசிகள் பலர் உளரென்பதனையும், இவரெல்லார்க்கும் முதல்வராய் இத் தெளிவுக்காட்சியின் எல்லையற்ற வியாபக வுணர்வினாலே எல்லா வுயிர்களின் நல்வினை தீவினைகளையும் பகுத்தறிந்து அவ்வவற்றிற்கு உரிய இன்பதுன்ப அனுபவங்களை அவ்வவர்க்குப் பிறழாது நுகர்விக்கும் அறக்கடவுள் ஒருவர் உண்டென்பதனையும் அறியமாட்டாத மாந்தர் பல தீவினைகளை மறைவிற்செய்து அவற்றால் மறுமையிற் பல நரகங்களிற்பட்டு வருந்தி இம்மையிலும் பிறப்பு இறப்பு வட்டங்களிற் கிடந்து சுழல்கின்றனர். நம்முடைய அறிவுகளெல்லாம் பருப்பொருளான இத்தூலவுடம்பின் வழியே சென்று, இந் நிலத்தோடு இயைபுடைய பருப்பொருள்களையே பற்றிக்கொண்டு நிற்கின்றன; ஆனதனாற்றான், நமதறிவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/123&oldid=1623809" இலிருந்து மீள்விக்கப்பட்டது