உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 3.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
100

❖ மறைமலையம் - 3 ❖

அறிதற்குத் தீர்மானித்தேன்; சில ஆண்டுகளுக்குமுன் சிட்நி என்னும் இவ்விடத்தில் இவ்விடத்தில் எனக்கு ஒரு சமயம் வாய்த்தது; அப்படிப்பட்ட சமயம் இனி எனக்குக் கிடைத்தல் அரிது; அல்லது அதனை யான் மிகுதியாய் விரும்புகிறேனென்றுஞ் சொல்லக்கூடவில்லை.”

“ஆன்மசக்தியை மிகுதிப்படுத்துவதற்கு ஒரு சிறு மாணவர் குழாத்தினை வைத்துப் போதித்து நடத்தி வருகையில் மாணவரில் ஒருவர் என்னை நோக்கித் ‘தென்னாப்பிரிக்காவில் உள்ள என் மகனைப்பற்றி எப்படியாவது நீங்கள் எனக்குச் செய்தி கொண்டுவரக் கூடுமாயின் - இது போயர் - சண்டை நிகழ்ந்த காலத்தில் நேர்ந்தது - அஃது என் மனைவிக்கு ஆன்மதத்துவ ஆராய்ச்சியில் ஆவலை உண்டுபண்ணுதற்குக் காரணமா யிருக்குமென்று நம்புகின்றேன்,’ என்று கூறினார்.”

“ஆகையால், இந்தச் செய்தியைத் தெரிந்து கொள்ளும் பொருட்டு ஒரு விசேட முயற்சி செய்யவேண்டுமென்று நாங்கள் எல்லாருந் தீர்மானித்தோம். ஒவ்வொருவரும் கைகோத்துக் காண்டு என்னோடொத்த மனநிலையிலுள்ளவர்களாய் எனக்கு உதவி செய்வா ரானார்கள்; சிறிது நேரத்திற்கெல்லாம், யான் ஒரு பரவசப்பட்ட நிலையை அடைந்தேன். அப்பொழுது என் உடம்பைப் பற்றியிருந்த ஓர் ஆவேசமானது அங்கிருந்த மற்றவர்களை நோக்கி ‘இவர் இறந்தவரைப்போற் கிடந்தாலும், இவரை நீங்கள் தொடப்படாது. நாங்கள் நெடுநேரம் இவ்விடத்தைவிட்டுப் போயிருப்போம்; அப்போது இவ்வுடம்பை யாருந் தொடுதல் ஆகாது’ என்றது. அதன்மேல், அவர்கள் என்னை அப்பொழுது நாற்காலியில் வசதியாக இருக்க வைத்தார்கள்; அவ்வளவுதான் அதைப் பற்றி யான் நினைவு கூர்ந்தது.”

“ஏறக்குறைய முக்கால்மணி நேரத்திற்குப் பிறகு அதே ஆவி மறுபடியும் எனதுடம்பைப் பற்றிக்கொண்டு அங்கிருந்தவரை நோக்கி, ‘உம் மகன் தென்னாப்பிரிக்காவில் காயப்பட்டுக் கிடக்கின்றான். இப்போது அவன் உமக்குக் கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறான்; இன்னும் இரண்டு மூன்று வாரத்தில் அவனிடமிருந்து உமக்குச் செய்தி வரும்’ என்று கூறியது. இங்ஙனம் நிகழ்ந்ததைப் பற்றி எனக்கு யாரும் எதுவுந் தெரிவிக்கக் கூடாதென்று முன்னமே கேட்டுக் கொண்டேன். அவ்விரவு யான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/133&oldid=1623825" இலிருந்து மீள்விக்கப்பட்டது