உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 3.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
108

❖ மறைமலையம் - 3 ❖

செய்ததென உணர்ந்தேன். மேலறி வுடைய தேவர்களோடு நாம் ஒன்று சேர்க்கப்பட்டக்கால் அது நம்மைத் தப்பாமல் வலிமைமிக்க ஆடவரும் பெண்டிரும் ஆக ஆக்குகின்றது; ஏனென்றால், ஆன்மதத்துவ உலகங்களில் நீங்கள் இயங்க வல்லவராகு முன்னமே, உங்களைச் சூழ்ந்திருக்கும் ஆற்றல் மிக்க சூக்கும சரீரவாசிகளுக்குக் கீழ் அடங்கின நிலையில் நீங்கள் உங்களை மனவொருமையினால் வைத்துக் கொள்ளுந் திறமை உடையவர்கள் ஆகவேண்டும்; அங்ஙனம் ஆனபின், நீங்கள் உங்கள் உடம்பைவிட்டுப் புறப்படும்போது, அறிந்தோ அறியாமலோ இவ்வுலக வாழ்வில் எதனைப் பெறும் நோக்கத்தோடு முயன்று வந்தீர்களோ அதற்கு இசைந்த மானத உலகத்திற்குச் செல்வீர்கள். ஆன்மதத்துவ வுலகங்களிலேனும் ஒளியாகாயத்திலேனும் தமக்கு அறிவு விளங்குதலைச் செய்துபார்க்க விரும்புவோர் யான் சொல்வனவற்றைப் பின்பற்றி நடக்கவேண்டும். இதனைச் செய்து பார்ப்பதற்கென்று குறிப்பிட்ட மாலைக் காலத்திற்குமுன் பகல்முழுதும் உணவு கொள்ளாமல் இருக்கவேண்டும்; நில உலகத்தைப்பற்றிய எல்லா நினைவுகளையும் அறவே ஒழித்துவிடல் வேண்டும்; எல்லா மாந்தர்களிடத்தும் இரக்கமும் அன்பும் மிக்க நினைவோடு அமைதியாகப் படுத்துக்கொள்ளல் வேண்டும்; அதன் பிறகு உங்கள் உடம்பை விட்டுப் போய்ச் சூக்கும உலகங்களிற் கண்ட அனுபவங்களைத் திரும்பவும் இந்நிலவுலகத்திற்கு வரும்போது நினைவுகூர்தல் வேண்டுமென்னும் வேட்கை யோடு கூடிய நினைவை உங்கள் உள்ளத்தில் எழுப்பிக் கொண்டே அசைவின்றி அமைதியாக உறங்கச் செல்லுக; இங்ஙனஞ் செய்தால் நீங்கள் பட்ட வருத்தத்திற்கெல்லாம் ஈடுகட்டுவதற்கு மேலான எண்ணங்களைப் பெரும்பாலும் எய்தப்பெறுவீர்கள் என்னும் உறுதியுடையேன்.

ஆனால், இதற்கும் இதுபோன்ற மற்ற எல்லா விஷயங்களுக்கும் வேறொரு தீதான பக்கமும் இருக்கின்றது. நாம் ஒளியாகாயத்தில் வெளிப்படும்போது நல்லவர்கள் கூட்டத்தையே நாம் எந்நேரமும் பொருந்தும்படி வாய்ப்பதில்லை. ஒருசமயத்தில் யான் அடைந்த அனுபவமானது பலநாள்காறும் என்னைத் துயரமான நிலைமையில் வைத்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/141&oldid=1623833" இலிருந்து மீள்விக்கப்பட்டது