உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 3.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
174

❖ மறைமலையம் - 3 ❖

செல்லுந் தூக்கம் இங்ஙனம் இருளிலே நடை பெறுவதனால் அன்றோ இருள்சூழ்ந்த இராக்காலத்திலே எல்லா உயிர்களும் தம்மை மறந்து உறங்குகின்றன; மற்று அருட்டெய்வமான திருமால் தூய பேரொளிப் பரப்பாய் விளங்கும் அருளிலே துயில்கின்றார் என்பதனை உணர்த்துவதற் கன்றோ தூய வெண்மை நிறத்தோடு கூடிய தீம்பாற்கடலிலே அவர் துயில்கொள்கின்றார் என்று அறிவு நூல்கள் இடை விடாது நுவலுகின்றன? எனவே, பொதுவாக எல்லா உயிர்கட்கும் உரிய துயில் அறியாமையோடு கூடி நிகழ்வதென்பதும், காக்குந் தெய்வமான திருமாலுக்கு உரிய துயில் அறிவோடு கூடி நிகழ்வதென்பதும் தெளிவாக அறியப்படுதல் வேண்டும்.

இனி 'யோக நித்திரை' என்னுஞ் சொற்கள் வடமொழிக்கு உரியவை; இந்தச் சொற்களினால் திருமால் செய்தருளுந் துயில் அறிவோடு கூடிய தென்பது தெளிவாக விளங்காவிடினும், இவற்றிற்கு நேராக வழங்கும் ‘அறிதுயில்’ என்னுஞ் செந்தமிழ்ச் சாற்கள் அத்தூக்கம் அறிவோடு நிகழ்வதென்பதனைத் தெளிவாகப் புலப்படுத்துகின்றன; பழைய தமிழ்ப் புலவரும் அரவணைப் பள்ளியில் அறிதுயில் அமர்ந்த” என்று பாடியிருக்கின்றனர். ஆகவே, 'யோக நித்திரை' என்னும் வடசொற்களைக் காட்டினும் ‘அறிதுயில்' என்னுந் தமிழ்ச் சொற்கள் பொருள் விளங்கக் காட்டினும், அவ்வட சொற்கள் மிகுதியும் வழக்கத்தில் வந்துவிட்டமையால் அவற்றையே இவ்வரிய பொருள்களுக்குத் தலைப்பெயராக வைக்க லாயிற்று. அங்ஙனம் அவற்றைத் தலைப்பெயராக வைக்க நேர்ந்தாலும், இஃது இனிது விளங்குதற்காக ‘அறிதுயில்' என்னுந் தமிழ்ச் சொற்களையே இதன் கண் அடிக்கடி எடுத்து ஆளுவேம்.

‘அறிதுயில்' என்பது அறிவோடு கூடிய தூக்கம். அறிவுள்ள உயிர்களிடத்து மட்டுமே தூக்கம் என்பது காணப்படுகின்ற தன்றி, அறிவில்லாத கல், மண் முதலிய வற்றினிடத்து அது காணப்படவில்லை. இங்ஙனம் உயிர்களிடத்து மட்டுங் காணப் படுவதாகிய தூக்கத்தின் இயல்பை ஆழ்ந்து ஆராயுங்கால் அஃது இருவகைப்பட்டு நிகழுந்தன்மை விளங்கா நிற்கும். அவ்விருவகைப்பட்ட தூக்கத்தில் ஒன்று அறியாமை என்னும் இருளிலே நடைபெறுகின்றது; மற்றொன்று அறிவு என்னும் அருளிலே நிகழ்கின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/207&oldid=1624266" இலிருந்து மீள்விக்கப்பட்டது