உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 3.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
176

❖ மறைமலையம் - 3 ❖

திரியும் முறை முறையே குறைந்து போவதும், அங்ஙனங் குறையுந் தோறும் பின்னும் பின்னும் நெய்யுந் திரியும் இட்டு அதனை எரிய விடுவதும், அங்ஙனம் நெய்யுந் திரியும் இடாவிட்டால் விளக்கு நின்றுபோவதும் நெய்யுந் திரியும் இட்ட தகழியில் விளக்கு ஏற்றாவிட்டால் அவையிரண்டுஞ் சிறிதுங் குறையா திருத்தலும் ஒவ்வொரு நாளுங் காணப்படுகின்றன அல்லவோ? அதுபோலவே, நமதுடம்பாகிய தகழியில் அறிவாகிய விளக்கு எரியும்போது இரத்தமாகிய நெய்யும் திரியாகிய மூளையும் வரவரக் குறைந்து கொண்டே போகின்றன; அங்ஙனம் அவை குறையுந்தோறும், வயிற்றகத்தே யுள்ள பசியும் விடாயும் அக்குறையினை அறிவிக்க, உடனே உணவுந் தண்ணீரும் உட்கொண்டு காண்டு அக்குறையினை நிரப்பிக் கொள்ளுகின்றோம்; வ்வாறு சோறுந் தண்ணீருங் கொடாமல் உடம்பினை அசையவிட்டு வந்தாற் சில நாளில் அவ்வுடம்பு அழிந்து போவதுதிண்ணம்.

இனி உடம்பினைச் சிறிதும் அசையவிடாமலும் நமதறிவினை வெளிமுகமாய்ச் செல்லவிடாமலும் வைத்தாற் சோறுந் தண்ணீரும் வேண்டப்படுவதில்லை; இது பகற் காலத்தில் உணவு வேண்டப்படுதல் போல இராக்காலத்தில் வேண்டப்படாமையின்கண் வத்து எளிதிற் கண்டு கொள்ளப்படும்.

இராக்காலத்தில் நமதறிவு உடம்பின் வாயிலாக வெளிமுகமாய்ச் செல்லாமையினாலும், உடம்பின் உறுப்புகள் வெளிமுகமாய் அசைந்து தொழிற் படாமையினாலும் செந்நீர் சுவறாமலும் மூளை வலிவு குறையாமலும் இருக்கின்றன; இங்ஙனம் உடம்பின் வலிவு குறையாமல் இருத்தலினாற்றான் இராக்காலத்தில் உணவு வேண்டப்படுவதில்லையாகின்றது.

ஆகவே, இராக்காலத்தில் உண்டாகுந் தூக்கத்தில் நமதறிவு சிறிதும் நிகழாமலும், உடம்பின் உறுப்புகள் வெளிமுகமாய் அசைந்து தொழிற் படாமலும் இருத்தலால் முன்னாளில் உண்டான களைப்பெல்லாம் முழுதும் நீங்கப் பெறுகின்றோம். எனவே தூக்கம் என்பது உயிர்கள் அடைந்த இளைப்பினை நீக்குவிப்பதான ஒரு நிலையாம். இவ்வாறு இருளில் தூங்கும் தூக்கம் இளைப்பினை நீக்குவிப்பது போலவே, அருளில் தூங்கும் தூக்கமும் இளைப்பினை நீக்குவிப்பதாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/209&oldid=1624271" இலிருந்து மீள்விக்கப்பட்டது