உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 3.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இனி, அருளில் நிகழுந் தூக்கத்தில் உயிர்களுக்கு அறிவு மிக்கெழுந்து விளங்குமாகலின் அங்கே இளைப்பாறுதல் எவ்வாறு கூடுமெனின்; அவ்வியல்பை ஒரு சிறிது விளக்கிக் காட்டுவாம். விழித்திருக்கையில் உயிர்களின் அறிவானது பருத்த இவ்வுடம்பின் வழியாக இயங்கி வெளியேயுள்ள பொருள்களை அறிகின்றது.இப்பருவுடம்பானது எலும்பு தோல் நரம்பு செந்நீர் முதலான பருப்பொருள்களால் ஆக்கப்பட்டது. பருப்பொருள்கள் மட்டுமே அசைவினால் தேய்வடைந்து குறையும். மின்னல், ஒளி, காற்று முதலான நுண்பொருள்களோ அவற்றைப்போல அங்ஙனம் தேய்வடைந்து குறையமாட்டா. அறிவினால் அசைக்கப்படும் நமதுடம்பின்கண் உள்ள பருப்பொருள்கள் எல்லாம் அவ்வசைவினாற் சிறிது சிறிதாகத் தேய்வு அடைதலால் அத்தேய்வினைத் திரும்பவும் நிறைவு செய்தற்கு உண்டாகுந் தூக்கத்தில் அறிவு இயங்காமல் வறிதே இருக்கின்றது; மேலும், இருகில் தூங்கும் தூக்கத்தில் அறிவு இயங்குவதற்குச் சிறிதும் இடமே இல்லை; எல்லாம் முழு இருளே.

ஆனால், அருளில் தூங்கும் தூக்கத்திலோ உயிர்களின் அறிவானது இப்பருவுடம்போடு கூடி இயங்காமல் இதனை விட்டுப் பிரிந்து, நுண்ணிய பொருள்களால் ஆக்கப்பட்ட சூக்கும சரீரம் என்னும் நுண்ணுடம்போடு கூடி அருளில் நடைபெறும்; ஆதலால், இப்பருவுடம்டபிற்குச் சிறிதும் அயர்வு உண்டாகமாட்டாது. உலகம் முழுதும் விளங்குங் கதிரவ ஒளியானது அங்ஙனம் விளங்குதலாற் சிறிதேனுங் குறைபடுகின்றதா? இம்மண்ணுலகமெங்குந் திரியுங் காற்றானது அதனாற் சிறிதேனுந் தேய்வடைகின்றதா? இல்லையே. ஆனால் நாம் நாடோறும் புழங்கிவரும் பொன்கலம் மண்கலம் முதலியன எல்லாம் நாளேற நாளேறத் தேய்ந்துவிடுவதைப் பாருங்கள்! இங்ஙனமே நமதுடம்பும் அறிவினால் இயக்கப்பட்டு நடை பெறும்போது தேய்வடையும், அதனால் இயக்கப்படாமல் வறிதே யிருக்கும்போது தேய்வடையாது, களைப்படையாது. அருட்டூக்கத்தில் இப்பரு உடம்பு எவ்வகைத் தொழிலும் இன்றி வறிதே இருத்தலால் இதற்கு எவ்வகையான தேய்வுங் களைப்பும் உண்டாவதில்லை.

அறிவானது காற்று, ஒளி, மின்னல் போன்ற நுண்பொருள்களால் ஆக்கப்பட்ட நுண்ணுடம்போடு கூடித்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/210&oldid=1624274" இலிருந்து மீள்விக்கப்பட்டது