உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 3.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ யோக நித்திரை அல்லது அறிதுயில் ❖
257


இங்ஙனம் நான்குவகையாகத் தடவுதலையும் ஒருவரைத் தொட்டாயினும் தொடாமலாயினும் செய்யலாம். சிலரைத் தொட்டால் அவர்க்குக் கூச்சமும் அருவருப்பும் இயற்கையாய் உண்டாகுமாதலால், அத்தகையோரைத் தொட்டுத் தடவுதல் கூடாது; தொட்டுத் தடவினால் அவர்க்கு அறிதுயிலும் வராமற்போம். ஆகையால், அவ்வியல்பினரைத் தொடாமலே அவருடம்பிற்கு ஒருவிரற்கடை அல்லது இரண்டு விரற்கடை எட்டிய நிலையில் கைகளை நிறுத்தித் தொடாமல் தடவுதலே நலம் பயப்பதாகும். வேறுசிலர், தடவுதலாற் கூச்சமும் அருவருப்புங்கொள்ளாமல் ஊற்றுணர்விற் பிறக்கும் இன்பத்தில் விருப்புடையராய் இருப்பராதலின், அவ்வியல்பினரைத் தொட்டு இனிதாய் மெல்லெனத் தடவுதலே நலமுடைத்து இவ்விரு வேறு வகையான தடவுதல்களையும் அவரவர் இயல்பறிந்து செய்தல் பெரிதும் நினைவு கூரற்பாலதாகும்.

இனித் தொட்டேனுந் தொடாமலேனும் கீழ்நோக்கித் தடவுங்கால் இரண்டு கைகளையும் நீட்டி உள்ளங்கை கீழ் நோக்கத் திருப்பி விரல்கள் ஒன்றோடு ஒன்றுபடாமல் சிறிது அகன்று நிற்க நேராக நிறுத்தித் தடவுதல்வேண்டும். விரல்கள் ஒன்றோடொன்று சேர்ந்து நெருங்கி நிற்குமானால், விரல்களிற் பாயும் நினைவின் மின்ஆற்றல் தடைப்பட்டு நின்று நன்கு செல்லாது. விரல்களைத் தனித்தனியே சிறிது அகல நிறுத்தினால் ஒவ்வொன்றன் வழியாகவும் அவ்வாற்றல் செவ்வனே ஓடிக் கருதிய பயனை விரவிற் பயப்பிக்கும். இங்ஙனம் கையின் விரல்களை நிறுத்துகையிற் கையின் கடைவிரலாகிய சிறுவிரலை ஏனை மூன்று விரல்களைவிட மிகவிலகி நிற்றல் வேண்டும் என்றும், அச்சிறுவிரல் நஞ்சுடையதென்றும், அதனால் அது பிறர் மேற்படுவது லாகாதென்றும் இக்கலைப் புலமையிற் றேர்ந்த ஒருசாரார் கூறுகின்றனர். ஆனால், இவர் கூற்றின் உண்மையை ஆராய்ந்து உறுதிகட்டுதற்குரிய வழி காணாமையின் அதனைப் பற்றி முடிவு சொல்லல் இயலாது. ஆயினும், அதனுண்மை தீரப்புலனாகும் வரையில், அதிற் பழகியோர் கூறுமாறு சிறுவிரலை அகல நிறுத்தித் தடவுதலே நன்று.

இனித், தலையிலிருந்து தடவிக்கொண்டு கீழ் இறங்கினவுடன் விரல்களை உதறிவிட்டுத் திரும்பவுங் கைகளை மேல் உயர்த்துங்காற், கவிழ்த்த கைகளைக் கவிழ்த்தபடியாக வேனும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/290&oldid=1627603" இலிருந்து மீள்விக்கப்பட்டது