உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 3.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ யோக நித்திரை அல்லது அறிதுயில் ❖
275


மேலே காட்டிய தெரிந்தெடுக்கும் முறையால் துயில்வோர் ஒருவரைத் தெரிந்தெடுத்து, அவரை எதிரே நிறுத்திக்கொள்க. இதனைப் பழகும் இடத்தில் ஏதோர் அரவமும், துயில்வோர் கருத்தைக் கவரத்தக்க ஏதொரு பொருளும் இல்லாமல் எல்லாம் அமைதியாக இருத்தல் வேண்டும். மேற்சொல்லிய முறையிற் போலவே அவருடைய முகத்தையும் தோள்களையும் முன்னே சிறிது இழுத்துக் குனியச் செய்து, அவர்தம் கைகள் விலாப்புறங்களுக்குச் சிறிது முன்னே துவண்டு தொங்குமாறு விடுக. இங்ஙனஞ் செய்தலால் துயில்வோருக்கு நரம்பிளக்கம் உண்டாம். அஃது உண்டாகவே, அவர் துயிற்றுவோரின் வழிப்பட்டு நிற்கும் நிலை உண்டாம். உடனே, துயிற்றுவோர் தமது வலது கையைத் துயீல்வோரின் முதுகு நடுவில் தோட்பட்டைகளுக்கு இடையிலே வைத்து, இடது கையை அவரது நெற்றி மேற் புருவத்தின் நடுவிலே மெல்ல வைக்கக்கடவர். அதன் பிறகு, துயிற்றுவோர் தமது இடதுகாலை அவருக்கு முன்னே அவர்தம் இணையடிகளை அடுக்கவைத்துத் தமது முழங்காலும் அவர்தம் முழங்கால்களைத் தொடும்படியாகக் கிட்டச் சேர்த்தல் வேண்டும்.

இவ்வாற்றல் அவ்விருவர்க்கும் மன இசைவு உண்டாம். இந்நிலையிற் சிறிதுநேரம் இருந்தபின், துயிற்றுவோர் தமது வலது கையால் அவரது பிடரியிலிருந்து முதுகின் அடிகாறும் தடவுதலோடு, இடது கையால் இடை இடையிடையே அவர்தம் நெற்றியையுங் கண்களையுங் கீழ்நோக்கிக் கன்னங்கள்வரையில் தடவுக; அதன்பின் அவருக்குப் பின்னேசென்று அவரது தலையின் பின்புறத்தேயிருந்து நடுமுதுகின் நெடுக வெதுவெதுப்பு உண்டாக வாயினாற் கீழ் நோக்கி ஊதுக. துயில்வோரின் கண்ணிறைப்பைகள் கீழ் இறங்கி அரைவாசி மூடுதலும், அவருடம்பில் அசைவுங் காணப்படும் வரையில் மேற்கூறியவாறு செய்க; அவ்விரண்டுங் காணப்பட்டவுடனே, துயிற்றுவோர் தமது வலது கையை மேற்சொல்லியவாறே அவரது முதுகின் நடுவைத்து, அவர் தம் கண்களை மூடிக்கொள்ளுமாறு கற்பித்துத் ‘தூங்கும்’ என்று கூறுக. மறுபடியும் மேற்காட்டியவாறே முன்னும் பின்னும் தடவுதலைச் செய்யப் புகுந்து, அவர் நிற்கமாட்டாது தள்ளாடும் வரையில் அங்ஙனஞ் செய்க. அதன்மேல், அவர் நிற்கலாற்றாது பின்னேவிழத் துவங்குவராதலின், அவர் கீழே விழுந்துவிடாமற் பின்னே தாங்கிக்கொண்டு, அவரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/308&oldid=1626102" இலிருந்து மீள்விக்கப்பட்டது