உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 3.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
336

❖ மறைமலையம் - 3 ❖



அவளும் சிறிதும் மலைப்படையாமல் ‘அப்படியே’ என்று உடம்பட்டுச் சொல்லி, அச்சிற்றரசியின் வடிவத்தையும் அவள் அன்று மாலையில் அமர்ந்திருக்கும் அறையையும் நிரம்ப நன்றாய் விரித்துரைத்தாள். (சுவீடனுக்குத் தலைநகரான ஸ்டாக்கோம் என்பது இப்போது யாங்களிருக்குங் காதன்பர்க் என்னும் நகருக்கு முந்நூற்றைம்பது மைல் தொலைவில் உள்ளது; இச்சிறுமி அச்சிற்றரசியை ஒரு காலும் பார்த்தவளும் அல்லள்.) அதன் பிறகு, அச்சிறுமி, அவ்வறையில் அவ்வரசியோடு உடனிருக்கும் ஓர் இளைஞனையுங் கண்ட அவன்றன் உருவத்தின் தன்மைகளையும் நுட்பமாக விரித்துரைக்கப் புகுந்தாள்.

அதைக் கேட்டு அக்கூட்டத்தில் இருந்தவர்களெல்லாம் நகையாடினர். சென்ற ஆறு திங்களாக அவ்வரசியின்பால் மிகுந்த காதலன்பு உடையனாய் அவளைப் பாராட்டிக் கொண்டு ஒழுகும் அவ் வரசிளைஞனைப்பற்றி அச்சிறுமி படம் எழுதிக் காட்டினாற்போற் சொல்லிய விளக்கவுரை அவ்வளவும் ஒத்திருந்தன. ஆனாலும் அவளது விளக்கவுரை வரவர அளவுக்கு மிஞ்சிச் சென்றமையாலும், புல்லிய தன்மையுடைய தாயிருந்தமையாலும் யான் அத்தனையோடு அதனை நிறுத்த வேண்டுவதாயிற்று. அச்சிற்றரசியையும் அவள் காதலனையும் பற்றிய ஒரு குறிப்பு அங்கிருந்தவர் கேட்கத் தக்கதாயில்லை; மேலும். அவ்வில்லத்திற்குரிய செல்வர்க்கும் அது துன்பந் தருவதாயிருந்தது. தானும் தன் நடக்கையும் இப்போது பலருங் காணத்தக்க நிலையிலிருப்பதைச் சிறிதும் உணராது, கதவுகள் தாழிட்டுச் சாத்தப்பட்ட அறைக்குள் தான் பத்திரமாயிருப்பதனால், தான் ஊரார் பழிச்சொல்லுக்குத் தப்பிக் கொண்டதாக அச்சிற்றரசி எண்ணியிருந்தாள். அறிதுயிலைப்பற்றி ஆங்காங்கு விரிவுரை நிகழ்த்தும் பொருட்டு நார்வே முழுதும் நான்கு திங்கள் வரையிற் சுற்றிவருதற்காக அடுத்த இரவிற் கிறித்தியானியா நகரத்திற்குச் சென்றேன். காதன்பர்க் நகரத்திற்கு யான் மறுபடியும் திரும்பிவந்த பொழுது முன்னே எனக்கு விருந்தாற்றிய அச் செல்வரைக் கண்டேன்.

நடைத்துயிலிற் சென்ற சிறுமி அச் சிற்றரசியைப் பற்றித் தெளிவுக் காட்சியிற் கண்டு கூறியவைகளைக் குறித்துத் தாம் இடையே ஆராய்ந்து பார்க்க அவை யவ்வளவும் உண்மையாயிருக்கத் தெளிந்ததாக எனக்கு எடுத்துரைத்தார். அதனோடு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/369&oldid=1626592" இலிருந்து மீள்விக்கப்பட்டது