உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 3.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ யோக நித்திரை அல்லது அறிதுயில் ❖
337

அன்று மாலையில் அச் சிற்றரசியின் நடக்கையைப் பற்றி எல்லாரும் நடையாடத் தக்கதாக அவள் முன்னறிந்து சொல்லிய நிகழ்ச்சி ஒன்றும் நிரம்ப உண்மையாயிருந்ததென்றும் அவர் எனக்கறிவித்தார்.” இவ்வாறு அறிதுயிலிற் சென்ற சிற்சிலர் தெளிவுக் காட்சியுடையராய்த் தொலைவில் நிகழும் நிகழ்ச்சி களையும் நேரே காண்பதுபோல் தெள்ளத் தெளியக் கண்டுரைக்கும் வியப்பினை இதிற் சிறிது முயற்சியெடுப்பா ரெவருந் தாமேயும் நேரிலுணர்ந்து வியக்கலாம்.

இங்ஙனம் நிலப்பரப்பின்மேல் அண்மையிலுஞ் சேய்மையிலும் மறைவிலிருப்பனவற்றையும் நடப்பனவற்றையுந் தெளிவுக் காட்சியுடையார் காணவல்லராதல் போலவே, இந்நிலத்தினுள்ளே மிகவும் ஆழமான இடங்களில் உள்ள பொருள்களையும் அவர்கள் தெளியக் கண்டுரைக்க வல்லவர்களாயிருக்கின்றார்கள். இதனையும் உண்மையா நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சியினால் விளக்கிக் காட்டுவாம். இஃது அமெரிக்காவில்மெய்யாக நடந்து, கல்வியிற் பெரும்புகழ் பெற்ற ஈடன் (See the article by Dr. Samuel Eadoni M.A., M.D., LL.D. Ph. D., in “The Phrenological Annual” 1892) என்பவரால் ஓர் இதழில் வரையப்பட்டது. அதனை அங்கிருந்தபடியே யெடுத்து இங்கு மொழிபெயர்த் தெழுதுகின்றாம்: - “சிக்காகோ நகரமானது, உலகத்தில் நாடோறும் விரைந்து முன்னேற்றம் அடையும் நகரங்களுள் ஒன்றென்பது யாவரும் நன்கறிந்ததேயாம். யோனா என்பவரின் சுரைக்கொடி ஒரே இரவில் முளைத்துப் படர்ந்தது போல, அதுவும் ஓர் இரவில் வளர்கின்றது. அதன் குடிமக்கள் விரைவிற் பெருகிவிட்டமையால், உயிர்வாழ்க்கைக்குஞ் செல்வவாழ்க்கைக்குந் தண்ணீர் இன்றியமையாது வேண்டப்படுவதாயிற்று. இயற்கைப் பொருணூல் (Science) பிசகிப் போயிற்று; நிலநூல்வல்லார் (Geologists) அத்தகைய நிலப்படையின் கீழ்த் தண்ணீர் இருத்தல் கூடாதென்று சொல்லிவிட்டார்கள். மேற்பரப்பிலேதான் தண்ணீர்க்காகப் பார்க்கவேண்டுவதாயிற்று; அழுக்கான தண்ணீரையே பயன்படுத்தக் கொடுத்தற்கு ஒரு கூட்டுச் சேர்ந்தது.

இந்த நாளில் அச் சிக்காகோ நகரத்தில் ஆபிரகாம் ஜேம்ஸ் என்னும் பெயருடைய ஒருவன் இருந்தான்; அவன் களங்கம் அற்றவன், கிறித்துமதத்திற்குப் புறம்பானவர் குடியிற் பிறந்தவன்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/370&oldid=1626593" இலிருந்து மீள்விக்கப்பட்டது