உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 3.pdf/380

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ யோக நித்திரை அல்லது அறிதுயில் ❖
347

செய்வீர்” என்று வற்புறுத்திச் சொல்லுக. அவர் அத்தூக்கத்திலிருக்கையில் நோயைப்பற்றிய சொற்கள் ஏதேனுந் தப்பித்தவறிக் கூடவராமல் விழிப்பாய்ப் பேசுக.

மூன்றாவது: அறிதுயிலிற் சென்றவர் அதனினின்றும் எழுந்தபின் இன்னின்ன நாளில் இன்னின்ன நேரத்தில் இன்னின்னவற்றைச் செய்தல் வேண்டுமென்று அவர் அத்துயிலில் இருக்கையில் வலியுறுத்திச் சொன்னால், அவர் அங்ஙனமே தாம் விழித்திருந்தாலுங் குறிப்பிட்ட காலத்திற் குறிப்பிட்ட இடத்திற் குறிப்பிட்டபடியேசெய்வர். ஆகையாற், பின் நடக்க வேண்டியவற்றைச் சொல்லி அவருக்குக் கற்பிக்கும்போது, செவ்வையாய் ஆராய்ந்து சொல்லத்தக்கவற்றைத் திருத்தமாகச் சொல்லல் வேண்டும். ஒருவரைத் துயிற்றுகின்ற மற்றொருவர் தம்மைத்தவிர வேறெவரும் அவரைத் துயிற்றுதல் ஆகாது என்னும் எண்ணம் உடையவராயிருந்தால், அவ் எண்ணத்தை அறிதுயிலில் இருப்பவர்க்குத் திட்டமாய்க் கூறுக. ஏனென்றாற், சிலமுறை அறிதுயிலிற் செலுத்தப்பட்ட ஒருவர் பிறகு எவரானும் எளிதிலே அறிதுயிலிற் செலுத்தப்படுதற்கு இசைந்தவர் ஆவர். இந்த உளவைத் தெரிந்த தீயோர் எவரேனும் இவ்வறிதுயின் முறையைத் தெரிந்துகொண்டு அவருக்கு எளிதிலே அறிதுயிலை வருவித்து அவரைத் தம் வழிப்படுத்திக்கொண்டு அவரைப் பலவகையிலும் ஏமாற்றவுங்கூடும். ஆதலால், நல்லோரான துயிற்றுவோர் தம்மால் துயிற்றப்படுவோர் பிறர் எவரானும் இங்ஙனந் துயிற்றப்படுதல் ஆகாது என்று கட்டுரைத்துச் சொல்லிவிட்டாற், பின்பு இம்முறையிற் பழகிய மற்றெவரும் அவரைத் துயிலச்செய்தல் இயலாது. இன்னும் அவர் அறிதுயிலில் இருக்கையில் அவருக்குத் தாம் கட்டுறுத்திச் சால்லியவைகளை அவர் அத்துயிலினின்றும் எழுந்தபின் நினைத்தலாகாது என்று சொல்லவேண்டினால், அங்ஙனமே சொல்லுக; அவர் விழித்தபின் அத்தூக்கத்தில் நிகழ்ந்தவைகளை ஒரு சிறிதும் உணரார்.

நான்காவது: மூவகைப்பட்ட அறிதுயிலிற் செலுத்தப்பட்டவர்களும் அந்நிலையிலிருக்குங்கால், அவர்களுக்குத் தோன்றுமாறு விளைவித்த உருவெளித் தோற்றங்களை மறையுமாறுசெய்து, அவரது உணர்வு எப்போதும்போல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/380&oldid=1627534" இலிருந்து மீள்விக்கப்பட்டது