பிறமொழி இலக்கிய விருந்து -2
217
அவள் முதலில் அதன் முத்துப் போன்ற எழுத்துக்களைக் கண்டு வியந்தாள்.
அப்பாடலின் சுவை எழுத்தழகை வென்றது. அவள் கண்களிலுள்ளே அஸோஜிரோவின் முகம் நிழலாடிக் கொண்டுதான் இருந்தது. ஆனால் அவன் படகை நோக்கி வந்ததை அவள் கவனிக்கவில்லை. இடையே வம்பர்கள் தாக்குதல் அவளை முற்றிலும் கலவரப்படுத்தியிருந்தது. இப்போது மீண்டும் அவளைக் காண அவள் பெருமகிழ்ச்சி அடைந்தாள்.
அத்துடன் அவனே அந்த வம்பர்களிடமிருந்து தன்னைக் காத்தான் என்ற எண்ணம் அவள் உள்ளத்தில் களிப்பும் கனிவும் ஊட்டியது.
மியூகி புன்னகை தவழும் முகத்துடன், “அன்பரே, உங்கள் உளப் பண்பை உங்கள் பாடல் மூலம் முன்பே அறிந்து கொண்டேன். உங்கள் கைவண்ணத்தையும் இப்போது கண்டேன். உங்களுக்கு நான் எவ்வளவோ நன்றி கூறக் கடமைப்பட்டிருக் கிறேன். என்னுடன் சிறிது அமர்ந்து ஒரு கோப்பை தேறல் அருந்தும்படி வேண்டுகிறேன்” என்றாள்.
வம்பரின் அடாதடி நுழைவு இன்னும் அவன் மனத்தை உறுத்திக் கொண்டிருந்தது. மேலும் அவளது நன்றியுணர்வை ஒரு கருவியாகப் பயன்படுத்தி, உடனமர்ந்து விருந்தயர்வது பெருந்தன்மையாகாது என்று அவன் எண்ணினான். ஆகவே அவன் “அம்மணி, நான் என் பாடல் நறுக்கைப் பெற்றுப்போகத் தான் வந்தேன். தங்கள் நல்லெண்ணத்துக்கும் அன்பாதரவுக்கும் என் நன்றி. இன்னொரு சமயம் வந்து தங்களைக் காணுகிறேன்” என்று கூறினான்.
அவன் பெருந்தன்மையையும் உள்ளக் குறிப்பையும் ஒருங்கே உணர்ந்துகொண்டே அஸாகே, "ஐயா, ஆண் துணையற்ற பெண்களுக்கு ஏற்படக்கூடும் இன்னலை நீங்கள் நேரிலேயே பார்த்தீர்கள். ஆகவே எங்கள் படகோட்டிகள் வரும் வரையாவது இங்கிருந்து எங்களைப் பெருமைப்படுத்த வேண்டுகிறேன்” என்றாள்.
“அப்படியானால் சிறிது தங்கிச் செல்கிறேன். தங்களைப் போன்ற பண்புடைய நங்கையருடன் பழகி அளவளாவுவதில்