உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 4.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதவசியம் அல்லது மனக்கவர்ச்சி

13

உரிமை பாராட்டினவர்கள் அவர் தம்மையிழந்து, அவருடம்பைப் பிறன் கையிற் கொடுத்துச் சுடுவிக்கவுங் கண்டோமே! அந்தோ! புல்லியரான மக்களெண்ணம் எவ்வளவு பிழைப்பட்ட தாயிருக்கின்றது! அவரது உரிமை எவ்வளவு நிலையற்ற தாயிருக்கின்றது! அவர் தம்மை உயர்த்திப்பேசும் உயர்ச்சி எவ்வளவு மாயமாயிருக்கின்றது! இவ்வியல்பினரான எளிய மக்கள், அத்தன்மையரான மாயவாழ்க்கையுடையார், பிழைபட்ட உணர்ச்சி யுடையார் ஒருவரையொருவர் தம்மாட்டு ஈர்த்தல் எப்படி? சிறிதும் பற்றில்லாத விருப்பமுடையரான பெரியோரன்றோ மற்றையோரையெல்லாம் தம்மாட்டு ஈர்த்து நடப்பிக்க வல்லராவர்? பற்றுடையவர்களைக் கண்டால் உலகத்தாரும் வெறுக்கின்றனர். பற்றில்லாதவர்களைக் கண்டால் எல்லாரும் அவரை உவக்கின்றனர். பொருள்களிற் பற்றுடைய உலகத்தாரே பற்றுள்ளவர்களைக் கண்டு அருவருக்கின்றனரென்றாற் பற்றுவைத் தொழுகல் தீது என்பதனை யாம் சொல்லவும் வேண்டுமோ! அது நிற்க.

இனி, ஒன்றைச் செய்யுமிடத்தும் மக்களறிவு தீய வழியிலுஞ் செல்கின்றது, நல்ல வழியிலுஞ் செல்கின்றது. தீய வழியிற் செல்வது மிகுதியோ நல்ல வழியிற் செல்வது மிகுதியோ என்று பகுத்துப் பார்த்தாற், பெரும்பாலும் மாந்தரின் செயல் களெல்லாந் தீயநெறிக் கண்ணேதான் முனைத்துப் போகின்றன. பாருங்கள்! ஒருவன் நாள் முழுதும் வருத்தி உழைத்துக் கூலியாகப் பெற்ற நான்கு பணத்தில் மூன்று பணத்தைக் கள்ளுக்கடையிற்கொடுத்துக்கள்ளை வாங்கிப் பருகி அறிவு திரிந்து வீட்டிற்போய் மனைவி மக்களுடன் கலகம் விளைத்து,அவர்கள் மிச்சமான ஒரு பணத்தைக் கொண்டு ஆக்கிய உணவையுந் தானே உண்டுவிட்டு அவர்களைப் பசியிலும் பட்டினியிலும் வருந்த விட்டுப் போகின்றான். ஒருவன் தான் தேடும் பொருளில் முக்காலே மூன்று வீசம் பங்கை வேசிமார் வீட்டிற் கொண்டு போய்ச் செலவிட்டு மனைவி மக்களைத் தெருவிற்றியங்க விட்டு நோய்கொண்டு வறுமைப்பட்டு இறக்கின்றான். ஒருவன் சூதாடிப் பொழுதையும் பொருளையும் போக்குகின்றான். ஒருவன்பிறரை ஏமாற்றிப் பொருள் ஈட்டிக்,குதிரைவண்டிபகட்டுப் பேச்சு ஆரவார ஒப்பனை மேற்கொண்டு திரிகின்றான். ஒருவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_4.pdf/46&oldid=1575998" இலிருந்து மீள்விக்கப்பட்டது