உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 5.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

மறைமலையம் – 5

பிறவுயிர்களின் எண்ணங்கள் நமது உள்ளத்திலும், நம்முடைய எண்ணங்கள் பிறவுயிர்களின் உள்ளத்திலுஞ் சேர்ந்து தோன்றுமாயின், அவ்விரண்டுந் தெரிந்து பழகுவார்க்கு அவற்றால் வரும் பயன்கள் இவ்வளவென்று நம்மால் எடுத்துச் சொல்லல் ஏலுமோ? இம் மனவெளியானது எங்குமுள்ள வான்வெளியினும் மிக நுட்பமான தாகையால் இதில் ஒருவர் தமது உள்ளத்தை எளிதிலே நிறுத்துவது அரிது. ஏனென்றால், மக்களுடை ய மனமானது எந்நேரமும் பருப்பொருளை அறிவதிலே மட்டும் பழகி வந்திருக்கின்றது. பரும்படியான பொருள்களையே அறிந்துவரும் மனம் நுண்பொருள்களை எவ்வாறு அறியும்? பருத்த பொருளைக் காணுங் கண் மிக நுண்ணிய அணுக்களைக் காண்கின்றதா? உரத்த ஓசைகளையே கேட்டுப் பழக்கம் ஏறின நஞ் செவி மிக நுண்ணிய ஒலியைக் கேட்கின்றதா? அருகிலுள்ள நாற்றத்தையே கவரும் மூக்கானது தொலைவிலுள்ள மணத்தை அறிகின்றதா? இல்லையே. இவற்றைப் போலவே இவற்றின் வழியாகப் புறப்பொருள்களை அறிந்துவரும் மனமும் இப் புறப்பொருள் களினும் நுட்பமான மனவெளியினை அறிந்து அதிற்சேர்ந்து நில்லாமற் போகின்றது. அங்ஙனமாயிற் பரும்படியாய் நிற்கும் மனத்தை நுண்ணிதாக்கி, அது நுண்ணிய மனவெளியிற் பொருந்தி நிற்கும்படி செய்யும் வகை யாதெனின்; முதலில் ஐம்பொறிகளை நுட்ப இயல்பு உடையதாம்படி பழக்கினால், அவற்றோடு ஒற்றுமைப்பட்டு நடக்கும் மனமும் நுட்ப இயல்புடையதாகும். அங்ஙனம் அவற்றைப் பழக்குமிடத்தும் மிகவும் பரும்படியான பொறியினின்று துவங்கிச் சிறிது சிறிதாக நுண்ணிய பொறிப் பழக்கம் வரையில் ஏறல் வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_5.pdf/55&oldid=1576515" இலிருந்து மீள்விக்கப்பட்டது