உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 25.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




112

---

அப்பாத்துரையம் - 25

அதை மாற்ற வகை தேடுவேன். அதுவரை என் பிள்ளை சத்தியரங்கனை வைத்துக்கொண்டு நீயும் அமைச்சரும் நாட்டைக் கவனித்து வாருங்கள். இதை அகற்றியன்றி நான் திரும்ப வரப்போவதில்லை" என்றான்.

மகன் உறுதி கேட்டுக் கலையரசி நடுநடுங்கினாள். அவனால் இம் மாற்றமுடியாப் பழியை அசைக்க முடியுமென்று அவள் நம்பவில்லை. வீணே இதைச் சொல்லி அதற்குத் தப்பி யிருந்த அவன் ஒருவன் வாழ்வையும் கெடுத்துக் கொண்டோமே என்று வருந்தினாள்.

தாய் தடுப்பதையும் மனைவி மக்கள் தடுப்பதையும் பொருட்படுத்தாமல் ஒரே வீறாப்புடன் விசயரங்கன் சத்திய ரங்கனிடம் ஆட்சியுரிமையை விட்டு விட்டுத் தம் மரபினர் சூறையாட்டுக் கிரையான கோயிலிருந்த இடம் உசாவி அத்திசை சென்றான்.

அக்கோவில் நகரினின்று நெடுந் தொலைவில் மக்கள் வாடையே படாத ஒரு பாழுங் காட்டின் நடுவிலிருந்தது.யாரும் நெடுங்காலம் போகாத வழியாயிருந்தபடியால் அது முள்ளும் புதரும் அடர்ந்து தீயவிலங்குகள், நச்சுப் பாம்புகள் முதலியவை நிறைந்ததாயிருந்தது. மரங்களையும் புதர்களையும் வெட்டி வழி செய்தும் விலங்குகளுடன் போராடிக் கொன்றும் உண்ண உணவின்றியும், பருக நீரின்றியும், பல துயருழந்தும் நெடுநாட் சென்ற பின்னரே அவன் அக்காட்டைக் கடந்தான். கோயிலைச் சூழ்ந்த கோட்டை மதில்களில் வாயில்கள் எதுவுமே காணப் படாமல் மூடப்பட்டிருந்ததால் அதில் ஏறிக் குதித்து உட்செல்ல வேண்டியதாயிற்று.

நகரினின்று புறப்பட்டுப் பல நாளாய் அவனுக்கு ஒழுங் கான உணவில்லை. அத்துடன் எங்கும் குளிக்கவோ உடைகள் அலக்கவோமுடியாதுபோனதால் புழுதியடைந்த தோற்ற மடையவனாயிருந்தான். விலங்குகளுடன் போராடியதாலும் முட்கள் பீறியதாலும் உடைகள் தாறுமாறாய்க் கிழிந்தும் உடல் காயம்பட்டுக் குருதி தோய்ந்தும் இருந்தன. ஆகவே கோயிலுக்குள் செல்லுமுன் குளிக்க எண்ணி எங்குத் தேடியும் குளமோ கேணியோ வேறு நீர் நிலையோ காணவில்லை. கோயிலை யடுத்து ஒரே ஒரு குளம் இருந்தது. ஆனால் அது