உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய வரலாறு, அண்ணாதுரை.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. என். அண்ணாதுரை

41


தாகவே முடியும்" என்று கூறினார். அதாவது, நண்பர் காமராஜர் நமது திட்டத்தின் விளைவு என்ன என்பதைக் கூறுகிறார். ஏன் அந்தத் திட்டம் தேவைப்படுகிறது என்பது பற்றிச் சிந்திக்க மறுக்கிறார்— ஒருவேளை சிந்தித்து உண்மையைக் கண்டபிறகு, மறைக்கிறாரோ என்னவோ! நமது விஷயத்தில் வடநாட்டுத் தலைவர்கள் குறுக்கிட்டபோது, காமராஜருக்கு மேலிடத்தின்மீது எவ்வளவு கோபம் வந்தது— நாம், அதே மேலிடம், உள்நாட்டு விவகாரத்தில், கலையில், நாகரிகத்தில், முக்கியமாகப் பொருளாதாரத் துறையிலே நுழைந்து, ஆதிக்கம் பெறுவதைக்கண்டு, கோபிப்பது குற்றமாகுமா என்பதை அவர் யோசிக்க வேண்டும். அவருக்குள்ள பல தொல்லைகளுக்கிடையே அவகாசம் கிடைப்பது அரிது என்றாலும், கொஞ்சம் அவகாசம் ஏற்படுத்திக்கொண்டு, நமது தலைவரிடம் பேசினால், திராவிடநாடு ஏன் தனி நாடாக வேண்டுமென்று கூறுகிறோம் என்ற காரணங்களைத் தெரிந்து கொள்ளலாம் — பிறகு அவர் தமது கருத்தை வெளியிட்டால் பொருத்த மிருக்கும். ஒரு பிரச்சினையை அதன் விளைவை முன் கூட்டித் தாமாகக் கற்பித்துக்கொண்டு கவனிப்பது, சரியான முறையல்ல. இந்தப் பிரச்சினையைக் கவனிக்கும்படி, காரணங்களை ஆராயும்படி காமராஜர்களை அழைக்கும் நாள்தான் ஜூலை I-ந் தேதி.

தனி அரசுரிமையிலே "தன்னலம்"
தோற்றமேன்?

திராவிடஸ்தானால், நாடு துண்டாகும் என்று சொன்னவர், அதேபோது, நமது இலட்சியத்தின் அருகே வந்து போகிறார், தெரிந்தோ தெரியாமலோ ! அவர் கூறியிருக்கிறார், 'ஆந்திரம், கேரளம், தமிழகம் ஆகியவைகள் தனிச் சுதந்திர அமைப்புகளாகி இந்திய சமஷ்டியோடுகூடி வாழ வேண்டும்' என்று INDEPEN-DENT UNITS தனி உரிமையுள்ள அங்கங்கள் என்கிறார். ஏன், அந்த ஆசை பிறந்தது? தனி உரிமை கோரக்காரணம் என்ன?