உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 30.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

அப்பாத்துரையம் - 30

கடவுள் என்ற சொல், மாது பிளான்ஸியைத் தூக்கிவாரிப் போட்டது. கடவுள் போன்ற எட்டாப் பொருள் பற்றிச் சின்னஞ்சிறு பிள்ளைகள் பெரியவர்கள் முன்னிலையில் பேசத் துணியும் காலம் இது என்று அவள் நினைத்து உறுமிக் கொண்டாள். ஆனால், அவள் வாயாடவில்லை.

அவள் வேறு பக்கமாகத் தன் வற்புறுத்தலைத் திருப்பினாள். "மருந்தூற்றுப் பதியில் வைத்து உன் தந்தை உயிர் நீத்து விட்டால் நீ என்ன செய்யக்கூடும்?

லாரைன்: நான் ஒரு கன்னித் துறவியாய்விடுவேன்!

லாரைனின் துணிச்சல் பயன் தந்தது. மாது பிளான்ஸிதன் அச்சுறுத்தல்கள் இனிச் செல்லாது என்று கண்டாள். லாரைன் சிறு பிள்ளையல்ல; தன் நிலைமையறிந்து கொண்ட நிறையிள மாது ஆகி விட்டாள். மருந்தூற்றுப் பதியிலும் யாவரும் அவள் அழகு, அவள் அறிவுத் திறம், நாகரிகப் பண்பு ஆகியவற்றை வியந்து பாராட்டினர். தந்தையின் உள்ளத்தில் கூட அவளைப் பற்றிய மதிப்பு உயர்ந்தது.

லாரைன் திரும்பி வந்தபோது, மாது பிளான்ஸிகூடப் பேசாது அவளை வரவேற்றாள்.

லாரைனின் வாழ்க்கையனுபவங்களால் அவள் அறிவு அவள் வயதுக்கு மீறியதாயிருந்தது. இவ்வறிவு அவள் உணர்ச்சியின் வளர்ச்சியைத் தடைப்படுத்திற்று. அவள் தன் பருவத்திலுள்ள மங்கையர்களைப் போல எதிர்காலம்பற்றி மனக்கோட்டைகள் கட்டவில்லை. அவள் மனம் இன்னும் தன் பழைய வாழ்வின் தொல்லைகளைப் பற்றியும் தன் நிகழ்காலச் சூழல்களைப் பற்றியுமே சிந்தித்து வந்தது. தவிர, கனவுக் கோட்டைகள் கட்டிவந்த பல பெண்களை அவள் அறிந்திருந்தாள். பலர் கனவுக் கோட்டைகள் போன போக்கை அவளால் மறக்க முடியவில்லை. பலர் காதற் கனவுகள் மணவிழாவின் எல்லையை எட்டாமலே காதற் கனவுகளாயிருந்தன. சிலர் கனவுகள் மணவினையின் எல்லையிலோ, மணவிழாவின் பின்வந்த தேனிலவுக் காலப் புத்தின்ப எல்லையிலோ நின்றுவிட்டன. இவற்றால் குடும்ப வாழ்வு வெறும் காதல் விளையாட்டாயிருக்க முடியாது என்பதை அவள் அறிந்தாள். சிறப்பாகப் பெண்களுக்குக் காதல், மணமாகும்