உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 32.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




14

அப்பாத்துரையம் - 32

பகுதிக்கு அருகிலேயே வட்டமிட்டது. மீண்டும் அவனைக் காணும் வாய்ப்புக் கிடைக்குமா என்றே அவள் துடித்தாள்.

அத்தீவுக்குத் தூதுவம் என்று பெயர், குமரிக் கடலில் மூழ்கியிருந்து முத்தும், சங்கும் எடுக்கும் செம்படவர்கள் அதில் வாழ்ந்தனர். கோயிலிலிருந்து சென்ற பெண்கள் அங்குள்ள செம்படவப் பெண்களே. இளவரசனுக்கு ஆதரவு தந்த பெண் செம்படவத் தலைவன் திமிலன் மருகியாகிய திருகுவளையே யாவள். அவள் தன் தாய் மாமன் வீட்டிற்கு வந்த சமயத்தில்தான் இளவரசனை மீட்க நேர்ந்தது. இளவரசன் அடுத்த நாளே அவளிடம் விடைபெற்று மீண்டான். தான் யார் என்பதை அவள் அவனிடம் கூறினாள். ஆனால், அவன் யார் என்பதை அவள் அறியவில்லை. அவளை மீண்டும் காணும் அவாவுடன் அவன் அவ்விடத்திலேயே அடிக்கடி சுற்றினாள்.

வேல்விழிக்கு அவனை அடிக்கடி காண வாய்ப்புக் கிடைத்தது. ஆனால் அவன் அவளைப் பார்க்கவில்லை. அவன் கண்கள் அடிக்கடி யாரையோ தேடின. அவன் தன்னை நாடவில்லை. தன்னைக் காத்தவள் என்று அவன் கருதிய மற்ற நங்கையையோ நாடினான் என்று அவள் கண்டாள். அவள் கோபத்துடன் அலைகளில் மூழ்கினாள். ஆனால் அவள் உள்ளம் அவளுக்கு எதிரியாகவே இருந்தது. அது அவளை அவன் பக்கமே தள்ளிற்று. அவனன்றித் தனக்கு வேறு உயிரில்லை; வாழ்வில்லை; இன்பமில்லை என்பதை அவள் உணர்ந்தாள்.

அவன் கரையில் செல்லும் இடமெல்லாம் அவள் கடற்கரையைச் சுற்றிக்கொண்டே சென்றாள். ஆனால் அவள் கரையில் உள்நாடிச் சென்றபோது அவள் மீள வேண்டிய தாயிற்று. "நான் ஏன் கடல் நங்கையாகப் பிறந்தேன். நில நங்கையாகப் பிறந்திருந்தால், இந்த நிலவுலக வேந்தனுடன் எப்போதும் வாழலாமே" என்று அவள் எண்ணி ஏங்கினாள்.

கடல் நங்கையாக இருக்கும்வரை அவனை அடைய ஒருபோதும் முடியாது. என்ன பாடுபட்டாலும், நிலவுலக நங்கையாகித் தீர வேண்டும். இதற்கு என்ன வழி? இதுவே அவள் ஓய்வு ஒழிவு இல்லாத சிந்தனை ஆயிற்று.