உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 32.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிறுவர் கதைக் களஞ்சியம்-1

35

வழித்துணை வேலன் ஒரு மனித நண்பன்தானா அல்லது நண்பன் உருவில் வந்த ஒரு தெய்வமா என்று இளஞ்சாத்தன் வியப்படைந்தான்.

வழித்துணை வேலனின் வாளுக்கு ஒரு நல்ல பயன் கிட்டிற்று.நள்ளிரவில் ஒரு இனிய - ஆனால் சோகமான பாடல் அருந்தக மாடத்திலிருந்து பரவிற்று. நண்பர் இருவரும் மாடி ஏறிச்சென்று பார்த்தனர். பல அடி நீளமுள்ள இறக்கையை விரித்த வண்ணம் ஓர் அன்னப்பறவை அந்தரத்தில் மிதந்தது. பாட்டு வரவர இனிமையாயிற்று. ஆனால் குரல் வரவரத் தளர்ந்தது. இறக்கையும் படிப்படியாகச் சுருங்கிற்று. பாட்டு முடிவில் பறவை கீழே விழுந்து மாண்டது. அப்போதும் இறக்கை இரண்டடி நீளமுள்ள தா யிருந்தது. வழித் துணைவேலன் இறந்த பறவையின் இறக்கைகளை வாளால் வெட்டி வைத்துக் கொண்டான்.

நண்பர்கள் மீண்டும் மலையேறப் புறப்படத் தொடங்கினர். ஆனால் அவர்கள் பயணம் எதிர்பாராது தடைப்பட்டது. நகர்த் தெருக்களெல்லம் காவலர்கள் அணி வகுத்து நின்றனர். அந்நாட்டின் அரசர் பாரி இளநாகனும் அவன் புதல்வி நாகவல்லியும் உலாவச் சென்று கொண்டிருந்தனர்.

நாகவல்லியின் அழகிய வடிவத்தைக் கண்டதும் இளஞ்சாத்தன் பேச்சு மூச்சற்று வியப்பே உருவாக நின்றான். ஏனென்றால், தந்தையுடன் கனவில் கண்ட அழகுருவம் அதுவே. "எப்பாடு பட்டாயினும், அவளையே பெற முயல வேண்டும். அல்லது அம் முயற்சியிலேயே மாள வேண்டும்” அருந்தகத்தின் நண்பரும் தலைவரும் பின்னும் மிகுதியாக அச்சுறுத்தினர். “அனுபவமற்ற இளைஞனே, அந்த இளவரசி அழகு கண்டு ஏமாறாதே. அவளைவிடக் கொடிய பேய்வடிவம் இருக்க முடியாது. அவள் கேட்கும் மூன்று கேள்விகளுக்குச் சரியான விடை கூறாவிட்டால் அவர்கள் தூக்கிடப்படுவார்கள். இப்படித் தூக்கிடப்பட்டவர்கள் எத்தனையோ இளவரசர்கள். இறந்த பின்னர் அவர்கள் உடல் தலையில்லாமல் தொங்கின. இளவரசியே தலையை விழுங்கி வந்தாள் என்று எல்லாரும் நம்புகிறார்கள். அவள் செய்வது கண்டு, மன்னன் கூட அவளை மனமார வெறுக்கத் தொடங்கி விட்டான். ஆகவே அந்த அரக்கிக்கு இரையாக வேண்டாம்" என்று அவர்கள் மன்றாடினர்.