உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 32.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




50

அப்பாத்துரையம் - 32

குளிரினின்றுங் காக்க உதவியிருந்தன. ஆனால் அவள் தன்னருகே குழந்தை இறந்து கிடப்பது கண்டு திகில் கொண்டாள். ஏனெனில் குழந்தை மாற்றப்பட்டது. அவளுக்குத் தெரியாது. கணவனையும், கணவன் தம்பியையும் காணாமல் அவள் சுற்றுமுற்றும் தேடினாள், கூவியழைத்தாள். காத்திருந்து பார்த்தாள். அவள் துயரம் கங்கு கரையற்றதாயிருந்தது. வாழ்வில் கசப்புற்று ஆற்றின் பரப்பில் தன் உயிரை ஒப்படைக்கத் துணிந்தாள்.

ஆற்றின் எதிர்க்கரையிலே மூதாட்டி அண்டர்கோவடிகள் என்ற அருட்பெரியார் அறச்சாலை கட்டி வாழ்ந்தார். அவர் தம் அறச்சாலைச் சிறுமியருடன் ஒரு படகில் ஆற்றைக் கடந்து வந்து சிறுமியருக்கு இன்னுணவளித்து உலவவிட்டு மீண்டும் படகேற இருந்தார். ஆற்றில் நிலைகடந்து ஒரு பெண் இறங்கித் தத்தளிப்பது கண்டதும் அவர் படகை அப்பக்கம் செலுத்தினார். சிறுமியர் உதவியுடன் இளவேனிலைப் பட படகேற்றித் தம் அறச்சாலைக்கே கொண்டு சென்றார். முதுமையுடைய அந்த அருண்மாதின் ஆதரவில் இளவேனில் தன் வாழ்வின் துயரைச் சிறிது சிறிதாக உள்ளத்தில் அடக்கி மக்கள் பொதுவாழ்வு நலத்துக்கான தொண்டுகளில் ஈடுபட்டாள்.நாளடைவில் அண்டர் கோவடிகளின் அருள் துறவு வழி நின்று, அவளும் அன்புத்துறவு பூண்டாள். வணிகர் கோப்பெண்டு என்ற முறையில் அவளும் வணிகர் கோவடிகள் என்ற துறவுப் பெயர் பூண்டாள்.

பிள்ளை பெற்றுத் தனியே தவிக்கும் மனைவிக்கும் உதவியாக நெருப்புத் தேடச் சென்ற பொன்முடியை ஊழின் குறும்பாட்டம் புத்தம் புதிய வகையில் அலைக்கழித்தது.பாலை நாட்டில் ஒரு தமிழ்ப் புலவன் பாடிய பழியறம் சூழ்ந்திருந்தது. அம் மரபில் ஓர் அரசன் பெண் கொலை செய்திருந்தான். இதனால் தலைமுறை தோறும் மரபுக் கால்வழி நலிந்து வந்தது. மன்னன் மனைவியாக வந்த பெண்கள் கருக்கொள்வதில்லை. மன்னனும் மணமான முதலாண்டிலேயே எவ்வழியிலோ படுக்கையிலே மாண்டு கிடந்தான். ஆண்டுதோறும் பாலை நாட்டு மக்கள் இந்நிகழ்ச்சி கண்டு மனங்குமுறினர். அத்துடன் மரபற்ற குடிக்கு மரபு தேடும் வேலையைப் பட்டத்து யானைக்கு அளித்திருந்தனர். மாண்ட அரசனை அதற்குக் காட்டியபின், அது யாரைத் தானாக முதலில் தன் கழுத்தின் மீது ஏற்றுவிக்கிறதோ, அவனையே அடுத்த அரசனாக்கி வந்தனர்.