உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
224 ||

அப்பாத்துரையம் - 33




குள்ள உருவம் புட்டிச்சாத்தனை நோக்கி, “இந்நண்பன் காண இந்தக் குன்றின்மீதிருந்து ஓர் அருவியை வரவழைத்துக் காட்டு,” என்றது.

குன்றின் முகட்டில் கதிரவனின் கடைசிக் கதிரொளி தயங்கி ஒளி வீசிய இடத்திலிருந்து ஒரு மின்னொளி கிளம்பிற்று. அது முகில் வரைகளைச் சுற்றும் மின்னற் கொடிபோலக் குன்றின் மேடு பள்ளங்களிடையே விரைந்து. நெளிந்து நெளிந்து வந்தது! ‘இம்’மென்பதன் முன்னே அவர்கள் பேசிக்கொண்டிருந்த மாளிகையின் அருகாகச் சலசலவென்று ஓர் அருவி வந்து விழுந்தது. அது மாளிகை கடந்து மலைச்சாரலில் உலவி, துறைமுகத்தை அடுத்த ஒரு சிறு குடாவில் சென்று கலந்தது! கீவ் புட்டிச்சாத்தனை என்றும் நம்பியதில்லை. ஆனால், இன்று ஒரு புட்டிச் சாத்தனின் திருவிளையாடலைக் கண்முன் கண்டான்!

“என்ன வியத்தகு புட்டிச்சாத்தன்! என்ன வியத்தகு புட்டி! இதற்காக என்ன விலை கொடுத்தாலும் தகும்!” என்று கீவ் வாய்விட்டுக் கூறினான்.

“ஐயமென்ன, தம்பி, கொடுத்த விலையையும் இது உடனே திருப்பிக் கொடுக்கும் அதற்குமேல் விரும்பிய யாவும் காடுக்குமே!” என்று குள்ள உருவம். அதன் முகத்தில் முதல் முதலாக மகிழ்ச்சிக் குறிப்புத் தோற்றிற்று. தன் ஆவல் கண்டு எங்கே அது ஐம்பது வெள்ளிக்குமேல் கேட்டுவிடப் போகிறதோ என்று அவன் அஞ்சினான்.

அவன் எண்ணத்தை அறிந்ததுபோல் அவ்வுருவம் “ஐம்பது வெள்ளிக்குமேல் கொடுக்க வேண்டிவரும் என்று நீ அஞ்ச வேண்டாம். நீ கொடுத்தால் கூட நான் ஐம்பது வெள்ளிக்கு மேல் வாங்க மாட்டேன்” என்றது.

“ஏன் அப்படி? இதில் ஏதேனும் சூது இருக்கக் கூடுமோ?” என்று எண்ணினான் கீவ். அந்த எண்ணத்தையும் ஊடுருவிக் கண்டதுபோலப் புட்டிக்குரிய குள்ள உருவம் பேசிற்று. “ஆம், இதில் ஒரு சிறிது சூது இல்லாமலில்லை; நான் உன்னை வஞ்சிக்கமாட்டேன்; நன்மை தீமைகள் யாவற்றையும் என் வரலாற்றையும் வாழ்வு தாழ்வையும் கூறிவிடுகிறேன்; அதன் பிறகு நீ விரும்பினால், நீ துணிந்தால், இதை வாங்கிக் கொள்ளலாம்.