உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

---

அப்பாத்துரையம் – 37

ஒருநாள் பிரடரிக் மன்னன் முன்னிலையில் மற்போர் ஒன்று நிகழ்ந்தது. அதனைக் காண்பதற்காக ரோஸலிண்ட், ஸீலியா இருவரும் சென்றனர். புகழ்பெற்ற ஒரு பெரிய வீரனுடன் ஓர் ளைஞன் மற்போர் செய்யக் காத்திருப்பதைக் கண்டனர். அரசன் இவர்களைக் கண்டதும் அழைத்தான். அழைத்து, "இப்போரில் ஈடுபடும் இளைஞனைக் குறித்து நான் மிக மிக வருந்துகின்றேன். இந்த வீரனோ, பெயர் பெற்றவன்; பலரைக் கொன்று வெற்றி பெற்றவன். அவனோ சிறுவன்; ஒன்றும் அறியாதவன். நீங்கள் அவனை வரவழைத்து இன்மொழிகள் கூறித் தடுக்க முயற்சி செய்யுங்கள். அவன் இந்த மற்போருக்கு இரையாவது நன்றன்று,” என்று சொன்னான்.

ரோஸலிண்ட், ஸீலியா இருவரும் இளைஞனை வரவழைத்தனர். முதலில் ஸீலியா அவனிடம் பேசினாள்; மற்போரில் ஈடுபடாதவாறு தடுக்க முயன்றாள். பிறகு, ரோஸலிண்ட் அவனை நோக்கி, "நீ இந்த வீரனோடு போர்புரிவது எங்களுக்கு வருத்தத்தைத் தருகிறது. உன்னுடைய வாழ்வு வீணாக அழிந்து விடுவதில் எங்களுக்கு மகிழ்ச்சி இல்லை; நன்றாக எண்ணிப் பார்த்து, மற்போரில் அகப்படாமல் விலகுமாறு கேட்டுக் கொள்கிறேன்,” என்று வேண்டினாள். இம்மொழிகள் இளைஞனுக்கு ஊக்கம் ஊட்டின.“எவ்வகையிலும் நான் வெற்றி பெற்று என் வலிமையை இவர்களுக்கு அறிவித்தல் வேண்டும்," என்று அவன் தன்னுள் எண்ணினான். “நீங்கள் என்னிடம் காட்டும் அன்புக்காக நன்றி கூறுகின்றேன். ஆனால், உங்கள் விருப்பத்தின்படி நான் விலகமாட்டேன். என்மீது சினம் கொள்ளல் வேண்டா. வெற்றி பெறுமாறு என்னை வாழ்த்துங்கள். ஒருகால் நான் தோற்று மாள நேர்ந்தால், என்னைக் குறித்துக் கவலைப்படும் நண்பர் ஒருவரும் எனக்கு இல்லை. ஆகையால் வெற்றி ஆயினும் ஆகுக; தோல்வி ஆயினும் ஆகுக. நான் பின் வாங்குதல் இல்லை,” என்று அஞ்சாது மறுமொழி உரைத்தான்.

மற்போர் தொடங்கிவிட்டது.ஸீலியாவும் ரோஸலிண்டும் கவலையோடு நோக்கிக் கொண்டிருந்தனர். ஸீலியாவைவிட ரோஸலிண்ட் மிகுந்த கவலை கொண்டாள். தன்னைக் குறித்துக் கவலைப்படும் நண்பர் ஒருவரும் தனக்கு இல்லை என்று ளைஞன் கூறிய சொற்கள் அவள் உள்ளத்தில் பதிந்து கிடந்தன.