உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்சுபியர் கதைகள் - 2

143

அவள் நிலைதவறினாள் என்பதற்குத் தனக்குக் கிடைத்த சான்றுகள் இவை இவை என்பதை அதில் குறிப்பிட்டிருந்தான். பின் அவளை எப்படியும் கொன்று அவள் கறையை அகற்ற வேண்டுமென வேண்டிக்கொண்டான். அதற்கு வாய்ப்பாக அவன் தான் மில்போர்டு ஹேவனுக்கு வருவதாகவும் அங்கு வந்து தன்னைக் காணும் படியாகவும் அவளுக்கு ஒரு கடிதம் எழுதினான். அதன்படி அவள் அங்கு வரும்போது பிஸானியோ அவளைக் கொன்றுவிட வேண்டும் என்பதே பாஸ்துமஸின் திட்டம்.

கணவன் பெயரையும் அவனைக் காணும் செய்தியையுந் தெரிந்து இமொஜென் எல்லையிலா மகிழ்ச்சியுடன் பிஸானியோவுடன் பயணமானாள். பிஸானியோவுக்குத் தன் தலைவனாகிய பாஸ்துமஸை மீறவும் மனம் இல்லை; அவன் ஆணையைச் செய்யவும் மனமில்லை. இங்ஙனம் வழியெல்லாம் அவன் போராடி இறுதியில் அந்த ஆணையை மீறி அவளிடமே அவ்வாணையைப் பற்றிய செய்திகளைக் கூறினான்.

தன் ஆரூயிர்த் தலைவனைக் காணும் மகிழ்ச்சி கொண்டு இமொஜென் இதுகாறும் விரைந்து வந்தாள். இப்போது அவன் உண்மையில் தன்னைக் கொல்ல விரும்பும் அளவுக்குத் தன்மீது வெறுப்பு கொண்டுள்ளான் என்பதை அறிந்தாள். இஃது அவளுக்குப் பேரிடி போல் திகைப்புத் தந்தது. பின் ‘ஏதோ ஒரு தப்பெண்ணத்தினாலேதான் இப்படி ஏற்பட்டிருக்க வேண்டும். நாளடைவில் அது தெளிவடையும் என்று பிஸானியோ தேற்ற ஒருவாறு தேறினாள். ஆயினும், தன் கணவன் வெறுத்தபின் வாழ அவள் ஒருப்படவில்லை. அப்போது பிஸானியோ அவளுக்கு நல்லுரைகள் கூறிப் 'பாஸ்துமஸின் மயக்க நினைவு மாறினபின் அவன் தன் செயலை நினைந்து, வருந்துவான், ஆதலால், அதுவரை வாழ்ந்திருந்தால் மட்டுமே அவன் துயரைத் தீர்க்க முடியும்,' என்று எடுத்துக்காட்டினான்.பாதுகாப்புக்கும் மறைவுக்கும் உதவும் வகையில் ஆண் உடை அணிந்து நீங்கள் ரோம் சென்று கணவனுடனிருந்து அந்த நல்ல நாளை எதிர்பார்த்திருங்கள்' என்றும் அவன் கூறினான்.

பிஸானியோ எப்படியும் அரண்மனைக்கு விடியுமுன் வர வேண்டியவன். எனவே இமொஜென் உருமாற ஆணுடை