உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

மறைமலையம் -23

என்று கூறியருளினமை காண்க. மற்றுப் பிற்காலத்து வடமொழியில் எழுதப்பட்டு வழங்குங் 'காமிகம்,' ‘காரணம்,’ முதலான ஆகம நூல்களோ சிவபிரான் திருக்கோயில்கள் அமைக்கும் முறைகளையும், அவற்கு வழிபாடு ஆற்றும் வகைகளையும், திருவிழாச்செய்யுந் திறங்களையும் இன்னும் இவை போல்வன பிறவற்றையும் விரித்துரைப்பக் காண்டு மன்றி, அவை வேதாந்த சித்தாந்த மெய்ப்பொருளாராய்ச்சிகளை எடுத்துரைக்கக் காண்கிலம்; இவை தமிழிலிருந்த பழைய சிற்ப நூல்களின் (கற்றச்சு நூல்களின்) மொழிபெயர்ப்பே யல்லாமற் பிறஅல்ல. வேதாந்த சித்தாந்த மெய்ப்பொருள் விரிக்கும் ‘பௌட்கரம்' முதலான உயர்ந்த அறிவுப் பெருநூல்களை ‘ஆகமம்’ என்று வழங்காமல், அவைதம்மை ‘உபாகமம்' என்று வழங்குதல் என்னை? என்று உற்றுநோக்குங்காற், சிற்ப நூல்களாகிய வடமொழிக் காமிகம். காரணம் முதலியன தோன்றியபின், 'பௌட்கரம்' முதலியவை பழைய தமிழாகம நூல்களினின்று மொழிபெயர்த்துச் செய்யப்பட்ட மை தெற்றென விளங்காநிற்கும். திருமூலர் கூறும் பழைய ஆகம நூல்கள் தூய மெய்ப்பொருளாராய்ச்சி நூல்களாதலும், இஞ்ஞான்றுலவுங் 'காமிகம்,' 'காரணம்,' முதலானவை சிற்பநூல்களாதலுந் தேர்ந்துணர வல்லார்க்குத் திருமூலர் கூறிய பழைய ஆகமங்களும், இஞ்ஞான்றுலவும் புதிய ஆகமங்களும் வெவ்வேறியல்பினவாமென்பது நன்கு புலனாம்.

அதுவேயுமன்றி, வடமொழியிலுள்ள நால் வேதங்கள், பதினெண் புராணங்கள், தரும நூல்கள்" முதலியவற்றை யெடுத்துக்கூறிய திவாகரநூல் அங்ஙனமே ஆகமங்களை எடுத்துக் கூறாமை. அந்நூல் தோன்றிய காலத்தில் ஆகமங்கள் வடமொழியில் எழுதப்படவில்லை யென்பதைத் தெளிவுறக் காட்டும் திருமூலர் இருந்த ஆறாம்நூற்றாண்டிற்கு மிகப் பின்னே பத்தாம் நூற்றாண்டில் திவாகர நிகண்டு இயற்றப்பட்ட தாகல் வேண்டும். இக்காலவளவு பிறகு மாற்றிக் கீழ்க்கொணரப் பட்டது.திவாகரமுனிவர் தாம் ஆக்கிய அத் திவாகரநிகண்டின் துவக்கத்தில் முதன் முதற் சிவபிரான் திருப்பெயர்களையும் அதன்பின் திருமால் முதலான தெய்வத்தின் பெயர்களையும் அமைத்துரைக்கக் காண்டலின், அவர் சைவ சமயத்தவராதல் துணியப்படும். அத்துணைச் சிறந்த சைவராகிய அவர் தமது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/81&oldid=1588352" இலிருந்து மீள்விக்கப்பட்டது