உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




74

அப்பாத்துரையம்

அந்தோணி எகிப்தில் கிளியோப்பாத்ராவுடனும், அவர் சேடியர் பேடியருடனும் சூதாடியும், அவளுடன் பொய்கை நீராடியும், பூம்பந்தாடியும், பொற்படகு ஊர்ந்தும், ஆடல் பாடல்கள் கேளிக்கைகள் முதலியவற்றில் கலந்தும் நாள் போக்கி வந்தான். அதேசமயம் அவன் நடைமுறைகள் முற்றிலும் ஒற்றர் மூலம் அறிந்து வந்த அக்டேவியஸ் இதுதான் சமயமென்று கண்டு அந்தோணியின் நண்பர்களை ஒவ்வொருவராக முறியடித்து அழித்தும்,அவன் பங்கிலுள்ள நாடுகளை வென்று கைக்கொண்டும் வந்தான். அவற்றைக் காதாற் கேட்டும் மனத்தால் கொள்ளாத வனாய் அந்தோணி சிலநாள் கடத்தினான். பின் “வரட்டும், அவன் எங்கே போகிறான். ஒரு கை பார்க்கிறேன்” என்று உறுக்கி நாள் போக்கினான். தன் படைத்தலைவர்களிடம், "இன்று புறப்பட்டுச் சென்றெதிர்ப்போம்; நாளை புறப்பட்டுச் சென்றெதிர்ப்போம்” என்று கூறி முயற்சியேயின்றிப் பலநாள் கழித்தனன். இங்ஙனமாக எகிப்தும் கீழ் நாடுகளும் நீங்கலாக எல்லாம் ஸீஸர் வசமாயின.

4. காதலுக்கு வீரம் பலியாதல்

ரோமப் பேரரசின் குழப்பத்தை விட இப்போது அந்தோணியின் மனத்திலுள்ள குழப்பமே மிகப் பெரிதாயிருந்தது. ஸீஸரின சிறுமையை - அவனது நன்றிகொன்ற தனத்தை - அவன் தன்னை அவமதித்த அமதிப்பை - எண்ணும்போதெல்லாம் அவன் தோள்கள் துடித்தன; அவன் மீசைகள் படபடத்தன. அப்போது அவன் இந்தக் கிளியோப்பாத்ராவையும் அவளது எகிப்தையும் சின்னாபின்னப் படுத்திவிடுவோமா என்றெழுவான். அடுத்த நொடியே அக் கிளியோப்பாத்ராவின் உருவம் - நகையும் சீற்றமும் மாறி மாறி வந்து நடனமிடும். அவள் முகம் மயிலும் நாண அன்னமும் பின்னிட நடந்துவரும் அவளது ஒய்யார நடை தேனினுமினிய தெவிட்டா அமிர்தான அவள் குயிலிசை மொழிகள் - ஆகிய இவை அவன் மனத்திரையில் வந்து தவழும். அப்போது அவன் தன் வீரத்தையும் தன் அறிவையும் இழந்து 'இவ்வுருவின் முன் ரோமப் பேரரசையும் என் வாழ்வையுங் கூடப் பலிகொடுத்த தயங்கேன்” என்பான்.

இறுதியில் ஸீஸர் மற்ற நாடுகள் அனைத்தையும் வென்று தன்னை எதிர்க்க எகிப்து நோக்கி வருகிறான் என்று கேள்விப்