உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சேக்சுபியர் கதைகள் - 3

89

நாட்களில் அரசன் நோயின் அடையாளமே இல்லாதபடி முழுமையும் குணமடைந்தான். ஆகவே, அவன் மட்டற்ற மகிழ்ச்சி கொண்டு அவளுக்கு விலை மதிப்பற்ற ஒரு கணையாழியைப் பரிசாக வழங்கினான். அதோடு அவ்அவையில் யாரை வேண்டுமானாலும் அவள் மணந்துகொள்ளலாம் என்றும், அவளுக்கு அவன் உறுதி கொடுத்தான். ஹெலெனா, அங்கே வேறு யார்மீதும் கண்ணெடுத்துப் பாராமல் ரூஸிலான் பெரு மகனாகிய பெர்ட்டிரமையே கணவனாகத் தெரிந்தெடுத்தாள்.

பெர்ட்டிரம், பழக்க மிகுதியினாலும் பணியாள் என்ற புறக்கணிப்பினாலும் ஹெலெனாவின் அழகையும், உயர் குணங்களையும் மதியாதவனாயிருந்தான். ஆகவே, தன் விருப்பத்திற்கு மாறாக அவள் தன் மீது சுமத்தப்பட்டதை அவன் வெறுத்தான். ஆயினும் என் செய்வது? அரசன் ஆணையை மறுக்க முடியாது;ஆதலால், பெர்ட்டிரம் அவளை வேண்டாவெறுப்பாக மணந்து கொண்டான்.

ஆயினும், மணத்தைத்தான் ஒருவர் வலிந்து சுமத்த முடியுமேயன்றிக் காதலைச் சுமத்த முடியாதன்றோ? ஹெலெனா, 'காதலற்ற மணம்' என்னும் கடு நரகிற்கு ஆளானாள். மண நாளிலேயே பெர்ட்டிரம், அவள் பக்கம் பாராமல் கடுகடுத்துப் பேசவும் சீறிவிழவுந் தொடங்கினான். அவற்றை யெல்லாம் அவள் பொறுமையே உருவாக நின்று தாங்கி வந்ததும், அவன் அவள் மேலுள்ள வெறுப்பைச் சற்றும் குறைக்காமல் அவளைத் திட்டி, "என் குடிப்பெருமையையும் பொருளையும் எண்ணித்தானே என் தலைக்குக் கண்ணிவைத்தாய். நீ அவற்றையே போய் மணந்து வாழ்” என்று அவளை ரூஸிலானுக்கே அனுப்பினான். அனுப்பி விட்டுப் பலநாடுகளிலும் திரிந்து இறுதியில் பிளாரென்சு என்னும் நகரம் வந்து, அந்நகர் அரசனது படையிற் சேர்ந்தான். வேண்டா மனைவியுடன் வாழ்வதை விடப் போரில் மாள்வதே நல்லது என்ற எண்ணத்துடன், அவன் வேண்டுமென்றே போர் முனைகளிற் சென்று நின்று காலனை விரும்பி வழிபாடு செய்தான். ஆனால், இவ்வகையினால் அவனுக்கு, அவன் விரும்பிய முடிவு சிறிதும் கிட்டவில்லை. நேர்மாறாக அவன் வெற்றியும் புகழும் மிகுந்து படைத் தலைவன் ஆவதற்கே அஃது உதவிற்று.