உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சேக்சுபியர் கதைகள் - 3

103

கறுத்திருண்ட முகிலினிடையிலும் வெள்ளிய மின்னற் கொடி தோன்றி ஒளிர்வதுபோல, நம்பிக்கையற்றுத் துயர் சூழ்ந்த இடத்திலும் மறைந்து நின்றளிக்கும் இறையருள் ஒளி வீசும் என்பதை யாரே அறிவர்! ஈஜியன் தான் ஆளற்றுத் துணையற்றுத் தவிப்பதாக நினைத்து மனமழுங்கிய அதே நாளில், அண்மையிலேயே அவன் மனைவியும் அவன் பிள்ளைகளும் இருந்தனர் என்பது அவனுக்குத் தெரியாதன்றோ? அதிலும், இறையருளால் ஒரு மகன் நிறைசெல்வமும் உயர்நிலையும் உடையவனாய் அருகிலுள்ள தொரு மாளிகையில் வீற்றிருந்தான் என்பதை எப்படி அவன் அறியக்கூடும்?

இதற்கிடையில் இங்ஙனம், ஒரே வடிவுடைய இரண்டு அந்திபோலஸ்களும் இரண்டு துரோமியோக்களும் அந்நகரில் இருந்தது அவர்களிடையே பலவகையான மருட்சிகளையும், குழப்பங்களையும் உண்டு பண்ணிற்று.

3. குழப்பங்கள்

ளைய அந்திபோலஸ் தன் பணியாளிடம் பணப்பையைக் கொடுத்துக், கடைக்குப் போய்ச் சமையலுக்கான பொருள்கள் வாங்கிவர அனுப்பிவிட்டுத் தான் நகர் பார்க்கும் எண்ணத்துடன் தெருக்களில் சுற்றிக் கொண்டிருந்தான்.

மூத்த அந்திபோலஸ் அதே நேரத்தில் தனது படை நிலையத்தில் இருந்தான். உணவு நேரமாகியும் தொழில் மிகுதியால் அன்று அவன் வீடு செல்ல முடியாமல் காலந்தாழ்த்த நேர்ந்தது. அவன் மனைவியாகிய அதிரியான அக்காலத் தாழ்வுக்குக் காரணந் தெரியாமல் பலவகையில் தன்மனத்தை அரட்டலானாள்.

அவள் தன் கணவனிடம் மாறாப் பற்று வாய்ந்தவளாயினும், ஐய மனப்பான்மையால் அலைக்கழியும் நெஞ்சினளாயிருந்தாள். இதனால் அவள் அவனுக்கு நேரம் வேளை என்பதின்றி எப்போதும் தொந்தரவு கொடுத்து வந்தாள். அன்றைக்கு முந்தின நாளும் அவள் அங்ஙனம் தொந்தரவு செய்த போது அந்திபோலஸ், "இப்படி நீ என்னை என்றும் அரிப்பதாயின், நான் உன்னை விட்டுவிட்டு வேறு மனைவிதான் பார்த்துக் கொள்ள வேண்டும்" என்று சினந்து கூறினான்.