உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மேனாட்டுக் கதைக் கொத்து

211

யாவது ஒழித்துக் கட்டிவிட வேண்டும் என்ற பொல்லாத எண்ணம் அவர்களுக்குத் தோன்றிவிட்டது.

அந்தக்காலத்தில் அவ்வூரில் விரல்குப்பி எளிதில் கிடையாத அரும்பொருளாக இருந்தது. தைக்கும்போது ஊசியைத் தள்ளுவதற்கு அது இல்லாவிடில் விரலில் ரத்தம் கட்டிவிடுமே! தேன்மொழியிடம் பொன்னால் செய்து மணிகள் பதித்திருந்த வேலைப்பாடமைந்த விரல் குப்பி ஒன்று இருந்தது. கடல் கடந்து வணிகஞ் செய்ய வெளிநாடு சென்றிருந்தபோது அவள் தந்தை அவளுக்கென வாங்கிவந்து கொடுத்திருந்தார். அவள் அதைத் தன் கண்ணெனப் போற்றி வந்தாள். தங்கள் தங்கைக்கு அதன்மேல் உயிர் என்பது அக்காள்மார் இருவருக்கும் தெரியும். வீட்டின் பின்புறத்திலுள்ள பெரிய பூந்தோட்டத்தில் அவர்கள் அந்த விரல் குப்பியை வீசி எறிந்து விட்டார்கள்; அந்தப் பூந்தோட்டம் ஒரு வியப்புமிக்க பூங்காவனம். அங்கே முல்லை, மல்லிகை, சண்பகம், மருக்கொழுந்து, பன்னீர்ப்பூ, பிச்சி, ரோசா, செவ்வந்தி, தாழம்பூ முதலிய மணமலர்ச் செடிகளும், மா, பலா, வாழை, மாதுளை, கிச்சிலி, எலுமிச்சை முதலிய நறுங்கனி மரங்களும், கரும்பும், தென்னையும் பனையும், இஞ்சியும், மஞ்சளும், தேக்கு, சந்தனம், தேவதாரு, கருங்காலி, மருது, ஈட்டி முதலிய பெரு மரங்களும் ஏராளமாக வளர்ந்திருந்தன. ஆனால், அத்தோட்டம் ஆள்விழுங்கிப் பூதத்துக்குச் சொந்தமானது. அங்குவரும் பச்சிளம் பிள்ளைகளையும், பெண்களையும் அப்பூதம் ஆசையோடு விழுங்கித் தின்றுவிடும் என்பது அந்த வட்டாரத்தில் உள்ள அனைவருக்கும் நன்றாகத் தெரியும்.

விரல்குப்பியை வீசி எறிந்துவிட்டுத் தமக்கையர் இருவரும் நல்ல பிள்ளைகள்போல் தாழ்வாரத்துக்கு வந்து தேன் மொழியைத் தங்களுக்குச் சிறிது துணி தைத்துத் தருமாறு கேட்டுக் கொண்டனர். சரி என்று சொல்லிய தேன்மொழி ஊசியும், நூலும் இருக்கும் இடத்தில் கூட வைத்திருந்த விரல்குப்பியைக் காணாமல் மனம் பதைத்து அங்குமிங்கும் தேடினாள்.வீடெங்கும் தேடியும் காணாமல் கண்கலங்கி நின்ற தங்கையைப் பார்த்து, வேல்விழியாள் பரிந்து பேசுவதுபோல் பேசத் துவங்கினாள்.