உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

மறைமலையம் 29 -

ஓ பூஷனே, இதற்கு நீ வலிமையைத்தேடுக.

எமக்கு நீ அருளுடையாய் இரு, எம்மை நிறையப்பண்ணு, எமக்கு உணவினைத்தா, எமக்கு உயிர்ப்பு ஏற்று.

ஓ பூஷனே, இதற்கு நீ வலிமையைத்தேடுக.

பூஷனை யாம்குற்றமாகச்சொல்லுதற்கு ஏதும்இலம்; அவனை எம் புகழுரைகளாற் பெருமைப்படுத்துகின்றோம்: செல்வத்தின்

பொருட்டு வலிமையிற்சிறந்த அவனை யாம்நாடுகின்றோம்.

இந்தப் பதிகமானது, ஆரியர்கள் இமயமலைக்கு வடக்கே மிகவும் எட்டியுள்ள இடங்களில் ஆடுமாடுகள் மேய்த்துக் கொண்டு ஊர் ஊராய் அலைந்து திரிந்த நிரம்பப் பழைய காலத்தே பாடப்பட்ட தொன்றாகக் காணப் படுகின்றது. அவர்கள் அப்போது ‘பூஷன்' என்னும் பெயரால் வணங்கியது விடியற்கால ஒளித்தோற்றமே யல்லாற் பிறிதில்லை. இரண்டரைத் திங்கள் வரையில் இருளிற் கிடந்து மாழ்கிய ஆரியர்கள் அவற்றின் கழிவிற் கதிரவன் வெளிச்சந் தோன்றக் கண்ட வளவானே பெருங்களிப்புற்று அத்தோற்றத்தைத் தெய்வ வடிவாக நினைந்து வணங்கியது இயற்கையே யாம். இங்ஙனமே ‘உஷாக்கள்,' 'அசுவிநிகள்' என்னும் பெயர்களால் அவர்கள் வணங்கிய தெய்வங்களும் அவ்விடியற் காலத்திற் காணப்படும் ஒளிவிளக்க மாறுதல் களேயாம். இமயமலைக்கு மிக வடக்கேயுள்ள அந்நாடுகளில் ஏறக்குறைய ஒன்றரைத்திங்கள் வரையில் விடியற்காலஒளி மிகுந்து கொண்டே செல்லுவ தன்றிக் கதிரவன் காணப் பட்டான்; இவ்வாறு ஒன்றரைத் திங்கள் வரையில் விடியற் காலமாகவே இருக்கும் அந்நாடுகளில் அவ்வொளியின் காட்சி மிகஅழகியதாய் வியக்கத்தக்கதாகவே யிருக்கின்றது; அவ்வொன்றரைத் திங்களும் சென்றபிறகுதான் பகலவன் கட்புலனாக அங்கே தோன்றுவன்; ஆதலால், அந் நாடுகளில் அஞ்ஞான்றிருந்த ஆரியர்கள் அவ்வொன்றரைத் திங்கள்வரையிற் பலவேறு மாறுதல்களோடு தோன்றும் அவ்விடியற்காலக் காட்சிகளைப் பலவேறு தெய்வங்களின் வடிவாகவைத்து வணங்கலாயினர். இந்திய நாட்டிற்கு வருமுன் ஆரியர் வணங்கிய தெய்வங்கள் மேற்காட்டிய ‘பூஷன்', ‘உஷாக்கள்,’ ‘அசுவினிகள்,’ ‘ஏழு ஆதித்தியர்கள்' என்பவை களாகவே இருத்தல் வேண்டும்'. இத்தெய்வங்கண் மேல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/127&oldid=1591792" இலிருந்து மீள்விக்கப்பட்டது