உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188

வேளாளர் நாகரிகம்

செய்வார்க்கே உயர்ந்த அறிவும் அவ்வறிவினைப் பயன் படுத்தும் முறைகளும் விளங்கும். ஆதலினாற்றான், வேளாளர்க்கு இரக்கமும் அறிவும் ஈகையுந் தொன்றுதொட்டு வரும் இயல்பு களாகக் கூறப்படுகின்றன. தம்மையொத்த மக்கள் வறுமை யாலும் நோயாலுந் துன்புறக் கண்டால், அவர்க்குள்ள அத்துன்பத்தின் கொடுமையினை நினைந்துருகி, அவை தம்மைப் பொருளாலும் மருந்தாலும் நீக்கவல்லவர்கள் வேளாளர்களே யாவர். பிறர் தரும் பொருளைப் பெற்றுத் தம் மெய்வருந்தாமல் இல்லத்திருந்து இனிது காலங்கழிப்பவர்க்குப், பிறர் படுந்துயர் தெரியாதாகை யால் அன்னவர் வறியோருக்கும் நோயாளர்க்கும் பிறர்க்குஞ் சிறிதும் இரங்கார். ஆதலினாற்றான், வேளாள ரல்லாத பிறர் பிறர்க்கு உதவி செய்தல் அரிதாயிருக்கின்றது. ஈகையும் விருந்தோம்பலும் வேளாளர்க்கே சிறந்தனவாக வைத்து நூல்கள் ஓதுதலும் பின்னே காட்டப்படும்.

இனித், தம்மோடொத்த மக்களின் துயர் களைதலேயன்றி, மக்களினுந் தாழ்ந்த ஆடு மாடு குதிரை கோழி கொக்கு முதலான சிற்றுயிர்கள் படுந் துன்பத்தையும் நன்குணர்ந்து, அவைகட்குத் தம்மாலும் பிறர் தம்மாலுந் தீங்கு நேராதபடி கொல்லா அறத்தை வளர்க்கவல்ல ஆற்றலும் வேளாளர்க்கே உரித்தாயிற்று.

உயிரோடிருக்கும் மக்களுக்கும் மக்களினுந் தாழ்ந்த சிற்றுயிர்களுக்கும் உதவியாற்றுதலோடு அமையாது, தம்மைப் பெற்று வளர்த்துப் பெரியராக்கிய தம் மூதாதைகளின் பேருதவியையும் நினைந்து, அவர்கள் இவ்வுலக வாழ்வைத் துறந்து மறுமையுலகங்கட்குச் சென்ற பின்னும், அவர்களது உயிர் தூய பிறவியையோ பிறவியொழிந்து இறைவன் திருவடியையோ அடையுமாறு இறைவனை வேண்டி வழுத்துதலும் வேளாளர்க்கே உரித்தாயிற்று.

இனித், தமதறிவு வளர்ச்சிக்கும் முயற்சியின் ஈடேற்றத்திற்கும் இன்றியமையாத வழிவகைகளைக் காட்டி அவ்விரண்டினுஞ் சிறந்த தம்முன்னோர்கள் எழுதிவைத்த நூல்களை ஓதி அவ்வாற்றாற் கல்வியைப் பரவச்செய்தலும் வேளாளர்க்கே சிறந்ததோர் அறமாயிற்று.

ஆகவே, ஈகைக்குப் பெயரான 'வேளாண்மை' என்னுஞ் சொல், அவ் வீகைக்குக் கருவியான ‘பயிர்த்தொழிலுக்கும்’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/213&oldid=1591882" இலிருந்து மீள்விக்கப்பட்டது